2011-09-17 15:15:42

செப்டம்பர் 18, வாழ்ந்தவர் வழியில்... சாமுவேல் ஜான்சன்


ஆங்கில மொழி அகராதியை முதன்முதலாக வெளியிட்டு, ஆங்கில மொழிக்கு அரியதொரு தொண்டாற்றிய சாமுவேல் ஜான்சன், இங்கிலாந்தில் Lichfield என்ற இடத்தில் 1709ம் ஆண்டு செப்டம்பர் 18ம் நாள் பிறந்தார்.
பல இடர்களுக்கிடையே தன் கல்வியை முடித்த சாமுவேல், சில ஆண்டுகள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் இலண்டன் சென்று நாளிதழ் மற்றும் வார இதழ்களுக்கு கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.
ஒன்பது ஆண்டுகள் அயராமல் உழைத்ததன் பயனாக 1755ம் ஆண்டு ஆங்கில மொழி அகராதியை வெளியிட்டார். இந்த அகராதியில் 42,773 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்த அகராதி வெளியிடப்பட்டு 155 ஆண்டுகளுக்குப் பின், Oxford ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.
சாமுவேல் ஜான்சன் மேற்கொண்ட மற்றொரு முக்கியமான பணி ஷேக்ஸ்பியர் உருவாக்கிய நாடகங்களைத் தொகுத்து, பல்வேறு குறிப்புக்களோடு 1765ம் ஆண்டு இவர் வெளியிட்ட நூல் தொகுப்பு. இத்தொகுப்பில் 8 பகுதிகள் உள்ளன.
சாமுவேல் ஜான்சன் 1784ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி காலமானார். Westminster Abbey என்ற கோவில் வளாகத்தில் Charles Dickens, T.S.Eliot, Gerard Manley Hopkins, Alexander Pope, William Wordsworth போன்ற புகழ்பெற்ற பல ஆங்கிலக் கவிஞர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள 'கவிஞரின் மூலை' (Poet's Corner) என்ற பகுதியில் இவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.