2011-09-16 15:39:16

கருத்தாங்கிய பெண்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்பட திருப்பீட அதிகாரி அழைப்பு


செப்.16,2011. ஒரு சமூகத்தின் உறுதியான தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் குடும்பத்திற்குத் தாயின் இருப்பு மிக முக்கியம் என்பதால், தாய்மைப்பேறு காலத்தில் இடம் பெறும் இறப்புக்கள் தவிர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பேராயர் சில்வானோ தொமாசி கேட்டுக் கொண்டார்.
தாய்மைப்பேறு அடைந்துள்ள பெண்களுக்குப் போதிய கவனம் கொடுக்கப்படாததால், கருவுற்ற காலம் மற்றும் குழந்தை பிறப்பின் போது உலகில் சுமார் 3 இலட்சத்து ஐம்பதாயிரம் பெண்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர் என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
“தாய்மைப்பேறு கால இறப்பும் மனித உரிமைகளும்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களைத் தடுப்பதற்காகக் கருத்தடைச் சாதனங்களையும் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் திருப்பீடம் கடுமையாய் எதிர்க்கின்றது என்றார் பேராயர்.
அதேசமயம், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருப்பது, எவ்வளவு இடைவெளியில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது போன்ற விவகாரங்களில் ஒரு கணவனுக்கும் அவரது மனைவிக்கும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
உயர்இரத்த அழுத்த நோய்கள், ஓயாதவேலை, இரத்தப்போக்கு, எய்ட்ஸ் தொடர்புடைய நோய்கள் என ஆப்ரிக்காவில் பெண்கள் இறப்பதற்கான முக்கிய காரணங்களையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.