2011-09-15 15:29:42

துபாயில் அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு


செப்.15,2011. இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று செய்திகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.