2011-09-14 15:23:04

போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியை எதிர்த்து இலண்டனில் அமைதிப் போராட்டம்


செப்.14,2011. இங்கிலாந்தில் Brentwood மறைமாவட்டத்தின் ஆயர் Thomas McMahon, மற்றும் Pax Christi அங்கத்தினர்கள் உட்பட, அமைதியையும், மனிதாபிமானத்தையும் விரும்பும் பல குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இச்செவ்வாயன்று இலண்டனில் ஓர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் நிறைந்த போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் கண்காட்சி ஒன்றை இலண்டன் மாநகரில் நடத்தி வருகின்றன.
இச்செவ்வாயன்று ஆரம்பமான இந்த மாபெரும் கண்காட்சியில் உலகின் 1300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. DSEi 2011 என்று அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி வருகிற வெள்ளி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிவுக்கான ஆயுதங்களை பெருமையுடன் பறைசாற்றும் இந்தக் கண்காட்சியை எதிர்த்து, இச்செவ்வாயன்று அமைதியை விரும்பும் பல நிறுவனங்கள் இலண்டன் பாராளுமன்றத்திற்கு முன் அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டன.
நிலையற்ற அரசுகளைக் கொண்டுள்ள மத்தியக் கிழக்குப் பகுதிகள் போர்கருவிகள் செய்யும் பல நிறுவனங்களுக்கு மிக முக்கியமான பகுதியாக உள்ளது வேதைக்குரிய ஒரு விஷயம் என்பதை சுட்டிக்க்காட்டிப் பேசிய Pax Christi அமைப்பின் பொதுச் செயலர் Pat Gaffney, நிலையற்ற அப்பகுதியையும் இன்னும் உலகில் அமைதிக்காக எங்கும் பல நாடுகளையும் கட்டியெழுப்புவதற்குப் பதில், போர்கருவிகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வது கண்டனத்திற்குரிய ஒரு போக்கு என்று கூறினார்.
2001ம் ஆண்டு நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்கப்பட்ட நாட்களிலும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.