2011-09-14 15:23:26

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்தித்து வரும் துன்பங்களைக் குறித்து ஆயர் பேரவையின் அறிக்கை


செப்.14,2011. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்தித்து வரும் துன்பங்களைக் குறித்து அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழு இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
‘மனித உரிமைகள் கண்காணிப்பு 2011’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த 146 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்களுக்கு பாகிஸ்தானில் நேரும் பிரச்சனைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
ஆள் கடத்தல், பாலியல் வன்முறை, சொத்துக்களை அபகரித்தல், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பாரபட்சம், கட்டாய மதமாற்றம் மற்றும் தேவநிந்தனைக் குற்றச் சாட்டுகள் என்று பல வழிகளிலும் கிறிஸ்தவர்களும் மற்ற சிறுபான்மையினரும் சந்தித்துவரும் கொடிய நிகழ்ச்சிகள் இந்த அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
1986 முதல் அமலில் உள்ள தேவநிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் இதுவரை 1081 பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 138 பேர் கிறிஸ்தவர்கள் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.