2011-09-14 15:22:28

இளையோரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட திருத்தந்தை அழைப்பு


செப்.14,2011. மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கல்வியை நன்முறையில் வழங்குவதற்கு, பெற்றோர், ஆசிரியர், மேய்ப்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போலந்து நாட்டில் “கல்வி வாரம்” கடைபிடிக்கப்படுவதையொட்டி இப்புதன் மறைபோதகத்தில் போலந்து மொழியில் இவ்வாறு உரைத்தத் திருத்தந்தை, இளையோரின் இதயங்களிலும் உணர்வுகளிலும் நல்ல பயிற்சியை வழங்கும் பொறுப்பை இவ்வாரம் அனைவருக்கும் உணர்த்தட்டும் என்று வாழ்த்தினார்.
மேலும், இப்புதனன்று இத்தாலியில் இறையடியார் அருட்சகோதரி Elena Aiello, அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த அருட்சகோதரி திருநற்கருணைமீது கொண்டிருந்த அளப்பரிய பக்தியானது நம் எல்லாரிலும் வளர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அருட்சகோதரி Elena Aiello, இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் அருட்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.








All the contents on this site are copyrighted ©.