2011-09-13 15:52:16

விவிலியத்தேடல் - கடவுளே! பிற மதத்தவரை மதிக்கும் வரம் தாரும் - திருப்பாடல் 74


செப்.13,2011. RealAudioMP3 அந்த டீக்கடையில் சில அப்பாக்கள் ஒன்றாகச் சேர்ந்துசிரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று சில விடலைகள் ஒளிந்திருந்து கவனித்தார்கள். ஓர் அப்பா சொன்னார் – “என் பையனுக்கு இராணுவத்தில வேலை கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று. “ஆமா, எதை வச்சி அப்படி சொல்றீங்க?” என்று இன்னோர் அப்பா கேட்க, அதற்கு அவர், “ஏன்னா, அவன் எல்லாப் பாடத்திலும் பார்டர்லதான் பாஸ் பண்ணியிருக்கான். அத வச்சுத்தான் சொல்றேன்னார்”. உடனே எல்லாரும் சேர்ந்து சிரித்தார்கள். பின்னர் ஓர் அப்பா, இன்னொருவரிடம், “ஏப்பா... என் பையனுக்கும், படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே, இப்போ என்ன பண்றான்?” என்று கேட்க, அவரோ, “அதான் அவன் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. படிக்கிறான்” என்றார். மீண்டும் அப்பாக்கள் மத்தியில் சிரிப்பு. இந்தச் சிரிப்புவெடிகளை அன்பு நேயர்களே, நாமும் இரசிக்கிறோம். ஆயினும் அந்த சிரிப்புக்களுக்கு இடையில் அந்த அப்பாக்களின் மனவேதனையிலிருந்து கிளம்பும் புலம்பல்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதான வேதனைகளைச் சிரித்து சமாளிக்கிறார்கள் என்பதே உண்மை.
இப்படிப் புலம்பல்களைக் குடும்பத்திலும் சமூகத்திலும் பணியிடங்களிலும் அரசியலிலும் நாடுகளிலும் என எல்லா இடங்களிலும் கேட்க முடிகின்றது. நியுயார்க் நகரில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியை நினைத்து இஞ்ஞாயிறன்று எத்தனைபேர் கண்ணீர் வடித்தார்கள். தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் எவ்வளவு புலம்புகின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து எத்தனை காலமாக மக்கள் சர்வதேச சமூகத்திடம் புலம்பி வருகிறார்கள். கிழக்கு ஆப்ரிக்காவில் குறிப்பாக சொமாலியாவில், பசிக்கு உணவில்லாமல் தாகத்திற்குத் தண்ணீர் இல்லாமல் இலட்சக்கணக்கில் அழுது மடிகிறார்கள். கணவன் குடிகாரனாக இருக்கிறாரே, மகன் ஊதாரியாய்ச் சுற்றுகிறானே, வானம் பொய்த்துவிட்டதே, பயிர்கள் கருகி விட்டதே, நாடு கலவரப் பூமியாக மாறி வருகிறதே... இப்படி மன வேதனைகளிலிருந்து வெளிவரும் புலம்பல்கள் மனித சமூகத்தில் யாரையும் விட்டு வைப்பதில்லை. ஆலயங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில் தனிமையாகப் புலம்பும் உள்ளங்கள் எத்தனை எத்தனை?
என் கடவுளே, என் கெஞ்சும் குரலைக் கேட்டருளும், ஆண்டவரே, எனக்கு இரங்கும், உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று பல நேரங்களில் கடவுளிடம்தான் நம் புலம்பல்களை முன்வைக்கிறோம். தாங்க முடியாத கஷ்ட நேரங்களில் சாமி படத்துக்குமுன் மண்டியிட்டுப் புலம்புகிறோம். வேளாங்கண்ணி ஆரோக்யத்தாயே அம்மா என் கண்ணீரைப் போக்கிவிடும் என்று மன்றாடுகிறோம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கும் தங்களது நாட்டிற்கும் துன்பம் ஏற்பட்ட போதெல்லாம் இறைவனிடம்தான் புலம்பினார்கள், உதவிக்காக மன்றாடினார்கள். திருப்பாடல் 74ம், எருசலேம் நகரமும் எருசலேம் ஆலயமும் அழிக்கப்பட்டதை நினைத்துப் புலம்புவதாக இருக்கின்றது.
இஸ்ரயேலின் எதிரிகள் எருசலேம் திருக்கோவிலை அழித்து தரைமட்டமாக்கினர் என்று சாமுவேல் முதல் புத்தகம் பிரிவு 7 கூறுகின்றது. கி.மு.587ல் நெபுக்கத்னேசரின் பாபிலோனியப்படை, எருசலேம் திருக்கோவிலைத் தீக்கிரையாக்கியது. இதனை அரசர்கள் இரண்டாம் புத்தகம் பிரிவு 25, 9ம், எசாயா புத்தகம் பிரிவு 64,10ம் குறிப்பிடுகின்றன. எனவே இந்தத் திருத்தல அழிவை நினைத்து இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம் புலம்பி அழுகின்றனர். ஏனெனில் இந்தத் திருக்கோவில்தான் இம்மக்கள் வாழ்வின் அடையாளம், மையம். எகிப்தில் பாரவோனிடம் அடிமைகளாய் கஷ்டப்பட்டபோது எங்களை அற்புதமாய் மீட்டு வந்த ஆண்டவரே, நீர் ஏன் இந்த அழிவை அனுமதித்தீர் என்று உரிமையோடு முறையிடுகின்றனர்.
“கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும். நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும். எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள். அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள். அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள். எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை....”
இறைவனின் பெயர், அவரது இல்லம், அவருடைய மக்கள் என எல்லாரும் இழிவுற்ற நிலையை நினைத்து புலம்பல் எழுவதை இந்த 74ம் திருப்பாடல் விவரிக்கின்றது.
“கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்? உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும் மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்! உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்!.....”
அன்று இஸ்ரயேல் மக்கள், தங்கள் கடவுளின் திருநாமத்தை எதிரிகள் தீட்டுப்படுத்துகின்றனர் என்று புலம்பினார்கள். திருக்கோவிலை தீயிட்டுக் கொளுத்திவிட்டனரே என்று முறையிட்டார்கள். ஆனால் இக்காலத்திலும் பல்வேறு மதத்தினர் பல நாடுகளில் இவ்வாறே புலம்புகின்றனர். அவர்களது ஆலயங்களும் உடைமைகளும் பிற மதத்தவரால் சூறையாடப்படுகின்றன, தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. கடவுள் பெயரால் சகமனிதன் சாகடிக்கப்படுகிறான், அவனது வீடும் பிள்ளைகளும் சாம்பலாக்கப்படுகின்றன. இந்த அநியாயங்களுக்கு நியாயம் சொல்ல கடவுளும் முன்னிறுத்தப்படுகின்றார். பொது வாழ்க்கையில் இப்படியென்றால்....
ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடவுள் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்? மதத் தீவிரவாதத்தை நடத்துவது யார்? அதை நடத்தும் வன்செயல் கும்பல் எப்படி உருவாகின்றது? தனியாட்கள் சேர்ந்ததுதானே குழு!. எனவே முதலில் கடவுள் தனிமனிதனில் ஓரங்கட்டப்படுகிறார். பின்னர் அத்தகைய மனிதர் சேரும் குழுவிலிருந்து ஒதுக்கப்படுகிறார். கடவுள் உணர்வற்ற இவர்கள் தங்களது மனங்களில் கொளுந்துவிட்டு எரியும் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்த கடவுள் பெயரை வீணாகப் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதத்தில் ஈடுபடுவோரில் நிச்சயமாக கடவுள் உணர்வு இருக்காது. ஏனெனில் வன்முறை கடவுளது பண்புக்கு முற்றிலும் முரணானது. உண்மையாகவே தனது உள்ளத்தில் கடவுளை வழிபடுகிறவன் அடுத்தவன் வணங்கும் கடவுளை மதிப்பான். அவன் சுதந்திரமாக வழிபடவும் அனுமதிப்பான். மனிதனில் இறைவன் வாழ்கிறார். எனவே மனிதனை அழிப்பது இறைவனையே அழிப்பதாகும். கடவுளை உள்ளத்தில் வைத்துப் பூஜை செய்பவர், அவரை நம்புகிறவர் பிறருக்கு ஒளியாக, உப்பாக இருப்பார். அத்தகையவர் வேலை செய்யும் இடங்களும், செல்லும் இடங்களும் மற்றவருக்கு வேதனையையும் துன்பங்களையும் அல்ல, மாறாக மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவரது இருப்பே பிறருக்கு இன்பமாக இருக்கும்.
அந்த மனிதர் அகிலாண்டேஸ்வரி பக்தர். அவர் சென்றவிடமெல்லாம் அந்த அன்னையின் சிலையைத் தூக்கிச் சென்றார். ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் விலையுயர்ந்த ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தார். இந்தப் பத்தியின் நறுமணத்தை நுகரும் ஒவ்வொருவரும் அவரது பக்தியைப் பாராட்டினர். ஆனால் அவர் தனது உள்ளத்தில் கொடூர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தீய எண்ணங்களை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதிலே கருத்தாய் இருந்தார். ஆனால் அன்னையின் திருவுருவச் சிலைக்கு முன்னர் மட்டும் பத்திக் குச்சிகளைப் கொளுத்தி வைக்கத் தவறவேயிலை. நாட்கள் நகர்ந்தன. அன்னையின் திருவுருவச் சிலை மெல்ல மெல்ல கறுத்துப் போனது. அந்த மனிதருக்கு மிகுந்த வருத்தமானது. அந்த அகிலாண்டேஸ்வரியிடமே புலம்பினார். தாயே, உன் முகம் கறுத்துப் போகும்படிச் செய்தது யார்? என்றார். அதற்கு அந்தத் தாய், “மகனே, என் முகம் கறுத்துப் போகக் காரணம் நீயே தான். நீ கொளுத்திய ஊதுபத்திகள்தான் காரணம்” என்றார். பின்னர் அகிலாண்டேஸ்வரி சொன்னார் : “மகனே பத்தியில் இல்லையடா பக்தி... செயலற்ற பக்தி செத்த பக்தி” என்று.
உண்மைப் பக்தனின் பக்தியும் இப்படித்தான் இருக்கவேண்டும். அரவிந்தரிடம் ஒரு யோகி கூறினாராம் : “இறைவனின் கைகளில் உங்களை முழுமையாக ஒப்படையுங்கள். அந்த இறைவன் உங்களை இயக்கும்படி இயங்குங்கள். அப்படிச் செய்தால் எந்த உபதேசமும் தேவையில்லை” என்று. இதனைத் தனது வாழ்வில் செயல்படுத்திய ஸ்ரீ அரவிந்தர் சொன்னார் : “மனதுக்குள் எதிர்ப்புகளை வைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் ” என்று.
மனத்தில் கசப்புணர்வைக் களைந்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டால், பக்தியைச் செயல்களில் காட்டினால் யாரும் பிற மத ஆலயங்களையும் பிற மதத்தவரையும் அவமதிக்க மாட்டார். இவ்வாறு வாழ்வதற்கு வரம் வேண்டி திருப்பாடல் 74 ஐச் செபிப்போம்.
“கடவுளே! ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே. என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே. பகலும் உமதே. இரவும் உமதே. கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே. கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர். எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! கடவுளே! எழுந்துவாரும்....சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறவாதேயும்... “








All the contents on this site are copyrighted ©.