2011-09-13 15:42:08

செப்டம்பர் 14, வாழ்ந்தவர் வழியில்... கிளாடியோ அக்வவீவா


இயேசு சபையை நிறுவிய புனித லயோலா இஞ்ஞாசியாருக்கு அடுத்தபடியாக, இச்சபையின் இரண்டாவது நிறுவுனர் என்ற பெருமைக்குரியவர் கிளாடியோ அக்வவீவா (Claudio Aquaviva). இவர் இத்தாலியில் செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் 1543ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி பிறந்தார். பன்மொழிப் புலமையும், கணித அறிவும் கொண்ட இவர், சட்டவியலையும் கற்றுத் தேர்ந்தார். 1566ம் ஆண்டு ஐரோப்பாவில் கொள்ளை நோய் பரவியபோது, நோயாளிகள் மத்தியில் அஞ்சாமல் உழைத்த இயேசு சபையினரின் பணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட கிளாடியோ, 1567ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1581ம் ஆண்டு இவரது 37வது வயதில் இயேசு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைவராகப் பணிபுரிந்த 34 ஆண்டுகளில் இயேசு சபையினரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. இந்த ஆண்டுகளை இயேசு சபையின் பொற்காலம் என்றும் கூறுவர். அறிவுத் திறனோடும், ஆன்மீக உறுதியோடும் கிளாடியோ அக்வவீவா இயேசு சபையை வழிநடத்திச் சென்றார். இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இயேசு சபையினரின் பணிகள் பரவ இவர் வழி வகுத்தார். இயேசு சபையினரின் முக்கியப் பணிகளில் ஒன்றான கல்விப் பணியைக் குறித்து இவர் எழுதிய Ratio Studiorum என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது. இவர் 1615ம் ஆண்டு சனவரி 31ம் நாள், தனது 72வது வயதில் இறையடி சேர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.