2011-09-12 16:07:30

செப்டம்பர் 13 வாழ்ந்தவர் வழியில்..... ஆர்தர் ஹென்டர்சன்


ஆர்தர் ஹென்டர்சன் ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோவில் 1863ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பிறந்தார். 1934ல் நொபெல் அமைதி விருதைப் பெற்ற இவர், பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவராக மூன்று முறைகள் குறுகிய காலம் பதவி வகித்தார். இவர் தனது 12 வது வயதிலே தொடர்வண்டியை இயக்கும் கருவிகளைச் செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 17வது வயதில் தொழிற்பயிற்சியை முடித்து இரும்பை வார்க்கும் தொழிலைத் தொடங்கினார். அச்சமயம் மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். இது அவரது சொந்த வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1884ல் தனது வேலையை இழந்தார். அதேசமயம் தனது கல்வியில் முழு கவனம் செலுத்தினார். அத்துடன் மறைபோதகப் பணிக்கும் தன்னை அர்ப்பணித்தார். ஹென்டர்சன், 1892ல் இரும்பு தொழிற்சாலைக் கழகத்தை நடத்துவதற்குத் தலைவராகவும், அத்துடன் வடகிழக்கு ஒப்புரவு அமைப்பின் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை ஹென்டர்சன் தொழிற்சங்க அரசியலில் நுழையக் காரணமாக அமைந்தன. வேலை நிறுத்தப் போராட்டங்கள் நன்மைகளைவிட தீமைகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன என்பதை உறுதியாக நம்பினார். தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு, போராட்டங்கள் மேலும் அதிகரிக்க உதவும் என்று இவர் உறுதியாய் நம்பியதால் அக்கூட்டமைப்பு உருவாகுவதை எதிர்த்தார். இதனாலே இரஷ்யாவின் விளாடுமீர் லெனின், “ஹென்டர்சன் ஒரு முட்டாள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். உலகில் போர் வராமல் இருப்பதற்கு ஹென்டர்சன் தனது பிற்கால வாழ்வில் பெரும் பகுதியைச் செலவழித்துள்ளார். இவர் உலக அமைதி அமைப்போடு வேலை செய்துள்ளார். ஜெனீவா ஆயுதக்களைவு கருத்தரங்கிற்கும் தலைமை தாங்கியுள்ளார். 1934ல் நொபெல் அமைதி விருதைப் பெற்றார் ஆர்தர் ஹென்டர்சன். இவர் 1935, அக்டோபர் 20ம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார்.








All the contents on this site are copyrighted ©.