2011-09-12 16:08:03

செப். 12 வாழ்ந்தவர் வழியில்..... சி. வை. தாமோதரம்பிள்ளை


1832ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இலங்கை, யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டி என்ற ஊரில் பிறந்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாதிருக்கத் தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்ததில் முதன்மையானவர். தமிழ் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் மற்றும் தமிழின் அருமை பெருமையைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை. இவர் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். 1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம், நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார். இவர், தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபராக இருந்த அருட்பணி பீட்டர் பேர்சிவல், தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார். 1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது பி.ஏ. பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். சட்டம் பயின்ற அவர், 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் நகரங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனைப் புகழ்ந்து வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை. அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு, திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது. சி. வை. தாமோதரம்பிள்ளை., தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1901, சனவரி ஒன்றாந்தேதி சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் மறைந்தார்.
நீதிநெறி விளக்கம் (1953), தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868), வீரசோழியம் (1881), திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி ஆகியவற்றை எழுதியுள்ளார் தாமோதரம்பிள்ளை.








All the contents on this site are copyrighted ©.