2011-09-10 15:19:53

திருத்தந்தையின் ஜெர்மனிப் பயணத்தின் போது ஆப்ரிக்காவுக்காக உண்டியல் எடுக்கப்படும்


செப்.10,2011. இம்மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தின் ஒரு நிகழ்வில் எடுக்கப்படும் உண்டியல், கிழக்கு ஆப்ரிக்காவில் கடும் வறட்சி மற்றும் பஞ்சத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரான Freiburg பேராயர் Robert Zollitsch அறிவித்தார்.
இம்மாதம் 22ம் தேதி திருத்தந்தை தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வத் திருப்பயணம், அந்நாட்டுக் கத்தோலிக்கச் சமுதாயம் விசுவாசத்தில் ஆழப்படுவதற்கு உதவும் என்று நிருபர்களிடம் கூறினார் பேராயர் Zollitsch.
இம்மாதம் 22 முதல் 25 வரை இடம் பெறும் திருத்தந்தையின் திருப்பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளார்கள் என்றும் பேராயர் கூறினார்.
இதற்கிடையே, சொமாலியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வறட்சிப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்வதற்குப் பாதுகாப்புகள் வழங்கப்படுமாறு எத்தியோப்பியா கேட்டுள்ளது.
சொமாலியாவில் இன்னும் நான்கு மாதங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பஞ்சத்தால் இறக்கக்கூடும் என்று ஐ.நா.எச்சரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.