2011-09-10 15:17:52

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : எந்த ஒரு சூழ்நிலையும் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது


செப்.10,2011. வன்முறை, கடவுளின் பெயரால் ஒருபோதும் நடத்தப்படக்கூடாது மற்றும் எந்த ஒரு சூழ்நிலையும் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பத்தாம் ஆண்டு நினைவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான நியுயார்க் பேராயர் திமோத்தி டோலனுக்கு அனுப்பிய கடிதத்தில், உலகிற்கு கருணையும் நீதியும் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகில் வன்முறைச் செயல்களாக அடிக்கடி கிளம்பும் பழிவாங்கும் உணர்விலிருந்து உலகம் விடுபடுவதற்கு, ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்திற்கும் நீதிக்கும் உலகினர் தங்களை உறுதியாக அர்ப்பணிக்க வேண்டும் என்று தான் உருக்கமாகச் செபிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இத்தகைய அர்ப்பணமானது, ஒளிமயமான மற்றும் அதிகப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்கத் தேவையான நீதியும் வளமையும் பெருக உதவும் என்றும் திருத்தந்தையின் கடிதம் கூறுகிறது.
உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தை 2008ல் திருத்தந்தை பார்வையிட்டு செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை அல்கெய்தா அமைப்பினரைச் சேர்ந்த 19 இசுலாம் தீவிரவாதிகள் நான்கு ஜெட் விமானங்களைக் கடத்தினர். இவற்றில் இரண்டு நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரத்தைத் தரைமட்டமாக்கின. மூன்றாவது விமானம், அந்நாட்டு Arlington லுள்ள பென்டகன் இராணுவக் கோட்டையில் விழுந்தது. நான்காவது விமானத்தைப் பயணிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது அது பென்சில்வேனியாவில், Shanksvilleக்கு அருகிலுள்ள வயலில் விபத்துக்குள்ளாகியது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.