2011-09-10 16:00:46

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவும், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டனும் முதல் முறையாகச் சந்தித்தபோது, கிளிண்டன் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்பினார். "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று பேச ஆரம்பித்த கிளிண்டன், தன மனதில் இருந்த கேள்வியை மண்டேலாவிடம் கேட்டார். "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்." என்று கிளிண்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.
அவரது தயக்கத்தைப் புரிந்து கொண்ட நெல்சன் மண்டேலா, அவருக்குப் பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் ஒலித்த ஒரு குரல் இப்படி பேசியது: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்து விட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போய்விட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை' என்று ஒலித்த அந்தக் குரலைக் கேட்டதும் அவர்கள் மீது ஆத்திரம், கோபம், வெறுப்பு இவை எனக்குள் பொங்கி எழுந்தன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்த நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே.' என்று இந்த மாற்றுக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது."
- Tony Campolo “Let Me Tell You a Story” (2000)

நெல்சன் மண்டேலா இந்த இரண்டாவது குரலைக் கேட்டதால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்ததால், அவர் இன்று சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இன்றும், தனது 93வது வயதில் உலகின் தலை சிறந்த ஒரு தலைவராக, பலரது வாழ்வில் நல்ல பல தாக்கங்களை உருவாக்கி வரும் நல்ல மனிதராக அவர் வாழ்ந்து வருகிறார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், நெல்சன் மண்டேலா தன் வாழ்நாளெல்லாம் சிறைப்பட்டுப் போயிருப்பார். வரலாற்றில் தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்று.

இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவைகளை, செய்தவைகளை எல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப் படும். இன்று அவர் மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும் போது, எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான் பேதுருவுக்கும் எழுந்தது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
மத்தேயு நற்செய்தி 18: 21-22
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது இயேசுவின் பதில். 7x70=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்து, ஏழாவது நாள் மன நிறைவோடு இறைவன் ஓய்வெடுத்தார் என்று தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம். எனவே, பேதுரு “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நெல்சன் மண்டேலா. அண்மைக் காலங்களில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட மற்றொரு செய்தி இது.

2008ம் ஆண்டு Laura Walters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்." மனதை உறுத்தும் இந்த வரிகளுடன் இந்த ஆவணப் படம் ஆரம்பமாகிறது.
Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப் படம் காட்டுகிறது.

மனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் பாதிக்கின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதே போல், அந்தக் கொலையாளிகளும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது மனதைத் தொடும் காட்சிகள். இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம் பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து 2009ம் ஆண்டு இதேத் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. Catherine Larson எழுதிய இந்தப் புத்தகம் பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கியுள்ளது, மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.

இந்த ஆவணப் படத்தில் ஒருவர் சொல்லும் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பைப் பற்றி அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்த கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."

மன்னிப்புக்குப் பதில் வெறுப்பு நம் மனங்களில் புரையோடிப் போய் நமது மனதையும் வாழ்வையும் ஓர் அமிலமாய் அரித்துவிட்டால், அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு செப்டம்பர் 11ம் தேதி நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை நாளாக அமைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் 11 அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஒரு பெரும் பாரமான பாடமாக இருந்து வருகிறது. செப்டம்பர் 11ம் தேதியின் பத்தாம் ஆண்டு நினைவைச் சுமந்து போராடும் அமெரிக்க மக்களை, முக்கியமாக உலக வர்த்தகக் கோபுரங்களில் இந்த மதியற்ற வன்முறையால் உயிரிழந்தோரின் குடும்பங்களை, இப்போது இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களில் உயிரிழந்தோர் குடும்பங்களை இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். அவர்கள் வெறுப்பிலிருந்து வெளியேறி, மன்னிப்பில் வளர அவர்களுக்காகச் சிறப்பாக வேண்டுவோம்.

இரண்டாம் உலகப் போரில் நாட்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம்.

நாட்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் காணப் பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.








All the contents on this site are copyrighted ©.