2011-09-08 15:24:44

வாழ்ந்தவர் வழியில் ... செப்டம்பர் 9 லியோ டால்ஸ்டாய்


லியோ நிக்கவாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy ) என்பவர் உலகப் புகழ்பெற்ற ஓர் இரஷ்ய எழுத்தாளர். தொடக்கத்தில் நாவல்களையும் சிறு கதைகளையும் எழுதி வந்த இவர் பிற்காலத்தில் நாடகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். “போரும் அமைதியும்”, “அன்னா கரேனினா” ஆகிய இரண்டும் லியோ டால்ஸ்டாயின் மிகச் சிறந்த நாவல்களாக எல்லாக் காலத்திலும் போற்றப்பட்டு வருகின்றன. இவை 19ம் நூற்றாண்டு இரஷ்ய வாழ்க்கையை விவரிப்பதில் உண்மைவாதப் புனைக்கதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன. 1870களில் சமுதாயத்தில் அறநெறி வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஆன்மீக எழுச்சிக்குப் பினனர் இவர் குறிப்பிடத்தக்க நன்னெறிச் சிந்தனையாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் மாறினார். இயேசுவின் மலைப்பொழிவை மையமாகக் கொண்ட அவரின் அறநெறிப் போதனைகளுக்கு டால்ஸ்டாய் அப்படியே கொடுத்த விளக்கமானது பின்னாளில் அவரைத் தீவிரக் கிறிஸ்தவராக்கியது. உலகின் மிகச் சிறந்த நாவல் எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் லியோ டால்ஸ்டாய், “ஓர் உண்மையான கிறிஸ்தவர் அமைதி விரும்பியாக இருக்க வேண்டும்” என்றார். “ஒவ்வொருவரும் உலகை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்வது பற்றி யாரும் சிந்திப்பதில்லை”; “ஒருவர் ஒருவரை மன்னிப்போம், அப்போதுதான் அமைதியில் வாழ முடியும்”; “கடவுளை ஆலயங்களில் தேடாதே, அவர் உனக்கு நெருக்கமாக இருக்கிறார், அவர் உன்னில் இருக்கிறார், அவரிடம் நீ முழுவதும் சரணடையும் போது மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சியற்றநிலைக்கும் மேலான நிலையில் நீ வாழ்வாய்”; “நீ மகிழ்ச்சியாய் வாழ விரும்பினால் உண்மையிலே வாழ்”; இப்படி பல உயரியச் சிந்தனைகளை உதிர்த்தவர் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவர் மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் 1828ம் ஆண்டு செப்டம்பர் 9ம் நாள் பிறந்தார். டால்ஸ்டாய்கள் இரஷ்யாவில் பெயர்பெற்ற பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் நிமோனியாக் காய்ச்சலால் தனது 82 வது வயதில் 1910ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அஸ்தபோவ் (Astapovo) என்ற சின்னஞ்சிறிய இரயில்நிலையத்தில் இறந்தார். இவரது அடக்கச்சடங்கில் கலந்து கொண்ட மக்கள்வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியதாகச் சொல்லப்படுகிறது. டால்ஸ்டாய் பற்றிச் சிறிதளவு அறிந்தவர்கள்கூட அவரது இறுதி ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு “ஒரு பெருமகன் இறந்துள்ளார்” என்று போற்றியுள்ளார்கள்.







All the contents on this site are copyrighted ©.