2011-09-08 15:43:06

புதுடில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்களின் வன்மையானக் கண்டனம்


செப்.08,2011. புதுடில்லியின் உயர்நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பை இந்தியக் கிறிஸ்தவ தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
இந்த வன்முறை இந்திய ஆயர்கள் அனைவரையும் பாதித்துள்ளது என்றும், பதட்டம் நிறைந்த இச்சூழலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அமைதியையும் சகோதர மனப்பான்மையையும் வளர்க்க வேண்டுமென்றும் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் 'அட் லிமினா'வுக்கென உரோம் நகர் வந்துள்ள இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப், முற்றிலும் மதியற்ற ஒரு வன்முறை இது என்று கூறியதோடு, இந்திய அரசு இவ்வன்முறைக்குக் காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து செயல்படுவதே இத்தகைய வன்முறைகளைத் தடுக்கும் ஒரு வழி என்று வலியுறுத்தினார்.
ஒவ்வொரு முறையும் இவ்வாறான வன்முறைகள் நிகழும்போது, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துரித கதியில் இல்லாததால், இவ்வன்முறைகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்று இந்தியத் துறவறத்தார் அவையின் தலைவர் சகோதரர் மானி மேக்குன்னெல் கூறினார்.
தற்போது பங்களாதேஷில் தன் அரசுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இத்தாக்குதல் கோழைத் தனமான ஒரு செயல்பாடு என்று தன் கண்டனத்தை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.