2011-09-07 15:12:20

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


செப் 07, 2011 கோடை விடுமுறை காலத்தை, அதாவது ஜூலை முதல் வாரத்திலிருந்து கோடை காலத்தை திருத்தந்தையர்களின் காஸ்தெல்கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் செலவிட்டு வரும் பாப்பிறை 16ம் பெனடிக்ட், செப்டம்பரின் இம்முதல் புதனன்று, பொது மறைபோதகத்திற்கென உரோம் நகர் வந்து, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு தன் உரையை வழங்கினார்.
செபம் குறித்த நம் புதன் மறைபோதகத்தொடரில் இன்று மூன்றாம் திருப்பாடல் குறித்து நோக்குவோம் என உரையைத் துவக்கினார்.
தன்னை சுற்றி வளைத்துள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி திருப்பாடல் ஆசிரியர் இறைவனை நோக்கி கூக்குரலிடுவதாக இத்திருப்பாடல் மூன்று அமைந்துள்ளது. தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த தன் மகன் அப்சலோமின் படைகளிடமிருந்து தப்பிச் செல்லும்போது மன்னர் தாவீது இத்திருப்பாடல் வரிகளை உரைத்ததாகப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கி தன் வாழ்வைப் பறிக்க முயலும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு, இறைவன் மீதான விசுவாசத்துடன் அவரை நோக்கி வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். தன் எதிரிகளின் பிடியிலிருந்து தனனைக் காப்பாற்ற வல்லவர் இறைவன் ஒருவரே என அவர் உறுதியாக நம்புகிறார். தீயவர்களால் அவமான மரணத்திற்கு தீர்ப்பளிக்கப்பட்டு, இறைவன் வந்து காப்பாற்றுவார் என ஏளனம் செய்யப்படும் நீதிமான் குறித்து 'சாலமோனின் ஞானம்' நூல் கூறுவது இப்போது நம் நினைவுக்கு வருகிறது. இங்கிருந்து நம் எண்ணங்கள் கல்வாரி நோக்கிச் செல்கின்றன. இயேசுவை நோக்கி வழிப்போக்கர்கள், இவன் கடவுளின் மகனென்றால் கடவுளே வந்துக் காப்பாற்றட்டும் என எள்ளி நகையாடுவதை அங்கு நாம் காண்கிறோம். இருப்பினும், நமக்கு நன்றாகவேத் தெரியும், விசுவாசத்தில் தன்னை நோக்கி அழைப்பவர்களுக்கு கடவுள் செவிசாய்க்கிறார் என்பது. தனது புனித மலையிலிருந்து அவர்களுக்குப் பதிலளிக்கின்றார் இறைவன். கண்ணுக்குப் புலப்படாத அந்த இறைவன், மிகப்பெரும் வல்லமையுடன் நமக்குப் பதிலளிப்பதுடன், நம் கேடயமாகவும் மகிமையாகவும் விளங்குகிறார். கல்வாரியில் இயேசு உயிர்துறந்தபோது அவர் இறைவனால் கைவிடப்பட்டது போல் தோன்றினாலும், விசுவாசக் கண்களுக்கு அதுவே மீட்பின் மணிமகுட நேரம். அதுவே சிலுவையின் வெற்றி, அதுவே நம் மீட்பரின் மகிமையின் நேரம்.
இவ்வாறு இறை வல்லமை மீதான நம் விசுவாசம் மற்றும் இறைவனின் பதிலுரை குறித்துத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.