2011-09-07 15:13:41

செப். 08, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, குன்னக்குடி வைத்தியநாதன்


1935ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்னக்குடியில் பிறந்தார் வயலின் கலைஞர், இசையமைப்பாளர் வைத்தியநாதன். இவர் தன் 12ம் வயதிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி வைத்தியநாதன், பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார்.
வா ராஜா வா, தெய்வம், கந்தன் கருணை உள்ளிட்ட மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். திருமலை தென்குமரி (1970) திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் குன்னக்குடி வைத்தியநாதன். திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களைக் குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
2008ம் ஆண்டு செப்டம்பர் 8ம் நாள் இரவு, தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் குன்னக்குடி வைத்தியநாதன் .








All the contents on this site are copyrighted ©.