2011-09-07 15:08:00

சுற்றுலாத் திட்டங்களுக்கு எதிராக கொழும்புவில் ஆர்ப்பாட்டம்


செப்.07,2011. இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற நேர்வதாகக் கூறி அந்நாட்டின் மீனவக் குடும்பங்களும், விவசாயிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அரசுத்தலைவரின் பெயரில் 'மகிந்த சிந்தனை' என்றழைக்கப்படும் இம்முன்னேற்றத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்திருந்தனர்.
சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அரசு பறித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இலங்கையின் மேற்குக் கரையை ஒட்டியுள்ள சிறு தீவுக்கூட்டம் ஒன்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு குத்தகைக்கு விடுவதையும், அங்கு அந்நிறுவனங்கள் 17 சொகுசு விடுதிகளைக் கட்டவிருப்பதையும் தேசிய மீனவர் ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹெர்மன் குமார சுட்டிக்காட்டினார்.
தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை மீனவர்களும் விவசாயிகளும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தனது சுற்றுலா வளர்ச்சிக் கொள்கை சரிதான் என அரசு வாதிடுகிறது. உள்நாட்டுப் போருக்கு பின் நாடு வகுத்துவரும் முன்னேற்றத் திட்டங்களில் சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமான இடம் வகிப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2016ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக அதாவது இருபத்து ஐந்து லட்சமாக உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது.







All the contents on this site are copyrighted ©.