2011-09-07 15:07:47

கிராமங்களில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு - மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு


செப்.07,2011. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில்தான், அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று சென்னை, இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இதய நோய் மற்றும் இரத்தநாள நோய் அதிகரித்து வருவது தொடர்பாக போரூர் இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக இதயவியல் நிபுணர் பேராசிரியர் தணிகாசலம் தலைமையிலான நிபுணர் குழுவினர், கிராம, நகர, நகரை ஒட்டிய பகுதி மக்களின் நலம் குறித்தும், இரத்தநாள நோய் பாதிப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்படி நடத்தப்பட்ட இந்த ஆய்வு கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளை பேராசிரியர் தணிகாசலம் இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
ஆய்வின் மூலம் 10ல் இருவருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் அடுத்த சில ஆண்டுகளில் இரத்த கொதிப்பு நோயினாலும், 25 விழுக்காட்டினர் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தவறான உணவுப் பழக்கம், வேலைப்பளு, சுற்றுச்சூழல் மாசு, உடற்பயிற்சி செய்யாமை, புகைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த அபாயத்திற்கு காரணிகளாக விளங்குகின்றன.
கிராமப் பகுதிகளில் 57.4 விழுக்காட்டினர் சத்தான உணவைச் சாப்பிடுவதில்லை. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் தான் அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் ஆகிய பல்வேறு முடிவுகள் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.