2011-09-06 14:14:25

போரினால் உறுப்பிழந்தோருக்கு செயற்கை உறுப்புகள்


செப்.06,2011. இலங்கையின் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் செயற்கை அவயவங்களை வழங்கும் சிகிச்சை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த இருபது பேர் கொண்ட மருத்துவர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய குழு இதற்கென யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேச மருத்துவமனையில் சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சிகிச்சை முகாம் சுமார் ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 500 பேருக்கு இந்தச் செயற்கை உறுப்பு சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எனினும் இந்த சிகிச்சை முகாமின் ஊடாக ஆயிரம் பேருக்கு சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்குத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக இந்தக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைத்திய சேவைக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வை உட்பட்ட பணிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், வடமாகாண சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள், வடமாகாண ஆளுனர் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.