2011-09-05 14:36:00

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகள் கடந்த பிறகும், அங்கு அமைதி கானல் நீரைப் போல் உள்ளது - கத்தோலிக்க ஆயர்


செப்.05,2011. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகள் கடந்த பிறகும், அங்கு அமைதியும், சிறுபான்மையினரின் உரிமைகளும் கானல் நீரைப் போல் இருந்து வருகின்றன என்று இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை செயலரான ஆயர் Norbert Andradi கூறினார்.
சமுதாயமும் மதங்களும் என்ற மையத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாட கொழும்புவில் அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ஆயர் Andradi, இலங்கையில் பெரும்பான்மையாய் உள்ள மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
பழைய வரலாற்றை முற்றிலும் புதைத்துவிட்டு, உண்மையான அமைதியை நிலைநாட்ட முடியாது என்று கூறிய ஆயர் Andradi, இலங்கை, பல்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகள் ஆகியவற்றின் சங்கமம் என்பதை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே தற்போது நிலவி வரும் உறவுகள் குறித்து நாம் கேள்விகள் எழுப்பவேண்டும் என்று கூறிய ஆயர் பேரவையின் செயலர், அரசியல் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.







All the contents on this site are copyrighted ©.