2011-09-03 15:07:22

நைஜீரியாவில் அமைதி நிலவ கிறிஸ்தவ, முஸ்லீம் தலைவர்கள் அழைப்பு


செப்.03, 2011. நைஜீரியாவின் மத்திய நகரமான ஜோஸில் இவ்வியாழக்கிழமை இடம் பெற்ற மோதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளவேளை, அந்நகரில் அமைதிக்கு அழைப்புவிடுத்துள்ளனர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள்.
கலவரங்களில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் பகைமையுணர்வைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துமாறு ஜோஸ் நகரக் கத்தோலிக்கப் பேராயர் Ignatius Kaigama கூறினார்.
உள்ளூர் இசுலாமியத் தலைவர் Sheikh Sani Yahaya Jingir ம் இதேமாதிரியான எண்ணத்தையே பிபிசி வானொலியிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த மேற்கு ஆப்ரிக்க நாட்டில் இடம் பெறும் வன்முறைப் பற்றிப் பேசிய லாகோஸ் கர்தினால் Anthony Olubunmi Okogie, Boko Haram பிரிவினைவாதக் குழுவுக்கு உதவி செய்வோரை அடையாளம் காண அரசுத்தலைவர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நைஜீரியாவின் அபுஜாவில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஐ.நா.கட்டிடம் குண்டு வைப்பு தாக்குதலுக்கு உள்ளானதில் குறைந்தது 23 பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.