2011-09-03 14:48:48

செப்டம்பர் 04, வாழ்ந்தவர் வழியில்... அண்ணா பல்கலைக்கழகம்


இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் 1978ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி உருவாக்கப்பட்டது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள ஏறக்குறைய அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக இயங்கி வரும் இப்பல்கலைகழகத்தில் பயின்றவர்கள் இன்று உலகெங்கும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றனர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சுஜாதா' என்ற புனைப்பெயரில் புகழ் பெற்று விளங்கிய தமிழ் எழுத்தாளர் இரங்கராஜன் ஆகியோர் இப்பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் இருவர். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் பணியை நிறைவுசெய்தபின், இப்பல்கலைகழகத்தின் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்து வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.