2011-09-02 14:35:28

நிதிப் பற்றாக்குறையைக் குறித்து அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் நன்னெறி வழியில் நடத்தப்பட வேண்டும் - அமெரிக்க ஆயர்கள்


செப்.02,2011. நிதிப் பற்றாக்குறையைக் குறித்து அமெரிக்க அரசு தற்போது மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் ஏழைகளுக்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகளை மையமாகக் கொண்டு நன்னெறி வழியில் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மேற்கொண்டுள்ள இந்த விவாதங்கள், அடுத்து பதவிக்கு எந்த கட்சி வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அமைந்தால், மக்களின் பிரதிநிதிகள் நன்நெறியினின்று பிறழ்ந்தவர்களாய் இருப்பர் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.
அரசியல் கட்சிகளையும், பெரும் செல்வம் வாய்ந்த நிறுவனங்களையும் காக்கும் விதமாக நிதி பற்றாக்குறை விவாதங்கள் தொடர்வதற்குப் பதில், நாட்டில் நிலவும், வேலையில்லா நிலைமை, வீடுகள் இன்றி இருப்போர் நிலைமை, அடுத்தத் தலைமுறையினரின் கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்களின் அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்த Albany ஆயர் Howard Hubbard மற்றும் Stockton ஆயர் Stephen Blaire ஆகியோர் கூறினர்.
நிதி நெருக்கடியினால், ஏழைகளுக்குத் தரப்படவேண்டிய நிதி உதவிகள் தடை செய்யப்படுவது நன்னெறி வழியில் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு கருத்து என்று ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.