2011-09-01 15:56:50

தஞ்சம்கோருவோர்: ஆஸ்திரேலிய அரசுக்கு நீதிமன்றம் தடை


செப்.01,2011. ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீமன்றம் தடை விதித்துள்ளது.
மலேசியாவுக்கு அனுப்பப்படுகின்ற அகதிகளின் மனித உரிமைகளுக்கு ஆஸ்திரேலியாவால் உத்தரவாதம் வழங்க முடியாது என்ற காரணத்தால் இத்திட்டத்துக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என்றும், சட்டவிரோதக் குடியேற்றத்தை ஒடுக்க ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பெரிய அடி இது என்றும் ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவை ஆஸ்திரேலியத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து தஞ்சம் கோருவோர் எண்ணூறு பேர் மலேசியா அனுப்பபடுவார்கள் என்ற ஒப்பந்தம் தமக்கு கவலை அளிப்பதாகவே இருந்தது என்றும், அந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது சிறப்பான ஒரு தீர்ப்பு ஆகும் என்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையில் அகதிகள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச அகதிகள் அமைப்பான ஐ.ஓ.எம்.இனால் பரிசீலிக்கப்பட்டு அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் நான்காயிரம் பேருக்கு ஆஸ்திரேலியா தஞ்சம் வழங்குவதாக இந்த ஒப்பந்தத்தில் தெரிவித்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒரு நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.