2011-09-01 15:55:12

கந்தமால் பகுதியில் மீள் குடியமர்த்தும் முயற்சிகள் குறித்த அறிக்கை கேட்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆணை


செப்.01,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் இன்னும் அகதிகளைப் போல வீடுகளை இழந்து வாழ்வோரை மீண்டும் குடியமர்த்தும் முயற்சிகளில் ஒரிஸ்ஸா அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்ற அறிக்கையை மனித உரிமைகளுக்கான மேல்மட்ட இந்தியக் குழு இன்னும் ஆறு மாதங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஒரிஸ்ஸா தலத்திருச்சபை மீண்டும் மீண்டும் அரசிடம் பல முறையீடுகளையும், விண்ணப்பங்களையும் அளித்து வருவதன் எதிரொலியாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று FIDES செய்தி கூறுகிறது.
மறுவாழ்வை அமைத்துத் தரும் கடமைகளில் அரசு வெகுவாகத் தவறிவிட்டதென்று தலத்திருச்சபையின் சார்பில் கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா தான் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
மறுவாழ்வு சீரமைப்புப் பணிகளில் தவறியதற்காகவும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஈட்டுத் தொகை வழங்கத் தவறியதற்காகவும் ஒரிஸ்ஸா மாநில அரசை இந்திய உச்ச நீதி மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நம்பிக்கையிழந்து நிற்கும் இவ்வேளையில் அரசும், நீதித் துறையும் உறுதியாகச் செயல்படுவது அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை வளர்க்கும் என்று கட்டக் புபனேஸ்வர் மறைமாவட்டத்தின் சார்பில் வழக்குகளைக் கையாண்டு வரும் அருள்தந்தை Dibakar Parichcha கூறினார்.








All the contents on this site are copyrighted ©.