2011-08-31 15:44:51

பாகிஸ்தானில் பாப்பிறை மறைபணிக் கழகங்கள் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது


ஆக.31,2011. பாகிஸ்தான் கத்தோலிக்க தலத் திருச்சபை விரைவில் துவங்கவிருக்கும் மறைப்பணி ஆண்டுக்கான கருப்பொருள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பாப்பிறை மறைபணிக் கழகங்கள் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, இவ்வாண்டினை மறைப்பணி ஆண்டாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பாப்பிறை மறைபணிக் கழகங்களின் பாகிஸ்தான் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Mario Rodrigues கூறினார்.
வருகிற செப்டம்பர் 30ம் தேதி ஆரம்பமாகும் இந்த மறைப்பணி ஆண்டின் கருப்பொருளாக, பாகிஸ்தான் சமுதாயத்தில் உரிமைகள், சுதந்திரம், கிறிஸ்தவர்களின் பங்கு ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை ஓர் உண்மையான மக்கள் ஆட்சி நாடாக மாற்றுவதில் கிறிஸ்துவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து இந்த ஆண்டில் சிந்திக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று அருள்தந்தை Rodrigues எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் உள்ள நல் மனம் கொண்ட பலருடன் கிறிஸ்தவர்களும் இணைந்து, இந்நாட்டில் ஒற்றுமையையும், மதங்களுக்கிடையே நல்லுறவையும் வளர்க்க முடியும் என்று தான் நம்புவதாக அருள்தந்தை Rodrigues மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.