2011-08-31 15:42:08

ஜப்பானில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் சிறப்பான முறையில் செயல்படுவார் – ஆயர் Isao Kikuchi


ஆக.31,2011. நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் பாதிப்புக்களிலிருந்து ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் சிறப்பான முறையில் செயல்படுவார் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் அந்நாட்டின் ஆயர் ஒருவர்.
ஜப்பானில் இவ்வாண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த இந்த இயற்கைக் கொடூரத்தின் மத்தியில் அங்கு கத்தோலிக்கத் துறவு சபையினரும், மற்ற கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்களும் மேற்கொண்ட உன்னதமான பணிகளை புதிய பிரதமர் உணர்வார் என்றும் ஜப்பான் காரித்தாசின் தலைவர் ஆயர் Isao Kikuchi கூறினார்.
இயற்கைப் பேரழிவு மற்றும் அணு உலைகளின் ஆபத்து ஆகியவை நிகழ்ந்தபோது, காரித்தாஸ் அமைப்பு ஜப்பானில் மேற்கொண்ட பணிகளைக் கண்ட அந்நாட்டு மக்களின் எண்ணங்களில் காரித்தாஸ் அமைப்பைக் குறித்த மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது என்று ஆயர் Kikuchi மேலும் கூறினார்.
மார்ச் மாதம் ஜப்பான் சந்தித்த இடர்களின்போது உறுதியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்தை அடுத்து, முன்னாள் பிரதமர் Naoto Kan பதவி விலகியதைத் தொடர்ந்து, Yoshihiko Noda புதிய பிரதமராக இச்செவ்வாயன்று பொறுப்பேற்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.