2011-08-30 14:49:35

வியட்நாம் விடுதலை நாளையொட்டி, 10,000க்கும் அதிகமான கைதிகள் விடுதலை


ஆக.30,2011. வருகிற செப்டம்பர் 2ம் தேதி வெள்ளியன்று வியட்நாம் விடுதலை நாள் இடம்பெறுவதையொட்டி, அந்நாட்டு அரசுத் தலைவர் Truong Tan Sang, 10,000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்வதற்கு கட்டளைப் பிறப்பித்துள்ளார்.
சிறு குற்றங்கள் புரிந்து சிறைபடுத்தப்பட்டுள்ள பலர் விடுவிக்கப்படும் இந்த நேரத்தில், தங்கள் மனசாட்சிக்காகவும், விடுதலை, நீதி இவைகளுக்காகவும் போராடியவர்கள் இன்னும் சிறையில் வாடுவது வேதனைக்குரியது என்று வியட்நாம் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Paul Nguyen Thai Hop, FIDES செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
எனினும், தற்போது விடுதலையாக உள்ளவர்களில் பழங்குடியினர் பலர் உள்ளனர் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் ஆயர் Thai Hop கூறினார்.
வியட்நாமில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளவர்களுக்காக, நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறதென்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர், தற்போது வியட்நாம் சிறைகளில் தங்கள் மனசாட்சிக்கென சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 258 பேர் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.