2011-08-30 15:46:50

ஆகஸ்ட் 31 வாழ்ந்தவர் வழியில்.... ஆர்தர் பிலிப்


ஆர்தர் பிலிப் (Arthur Phillip), என்பவர் பிரித்தானிய கடற்படைத் தலைவரும் காலனித்துவ நிர்வாகியுமாவார். இவர், ஆஸ்திரேலியக் கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக இருந்தவர். சிட்னி நகரை அமைத்தவரும் இவரே. இலண்டனில் 1738 அக்டோபர் 11ல் பிறந்த ஆர்தர் பிலிப், தனது 15வது வயதில் பிரித்தானியாவின் ராயல் கடற்படையில் சேர்ந்தார். 1786, அக்டோபரில் பிலிப் HMS சிரியஸ் என்ற கடற்படைக் கப்பலுக்கு காப்டனாகவும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் கைதிகளுக்காகப் புதிதாக அமைக்கப்படவிருந்த நியூ சவுத் வேல்ஸ் என்ற காலனிக்கு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அழைத்துச் சென்ற 772 கைதிகளின் முதல் பிரிவு 1787, மே 13ல் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டது. இவர்களில் கடற்பயணத்தின் போது உயிர் தப்பியவர்கள் 732 பேர் மட்டுமே. இந்த 732 பேரும் படிப்பறிவோ அல்லது வேலைத்திறனோ அற்றவர்கள். சேரிகளில் சில சில்லறைத் திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். பிலிப்புடன் புதிய காலனியை நிர்வகிப்பதற்காக சிலரும் சென்றிருந்தனர். பிலிப்பின் கப்பல் போர்ட் ஜாக்சன் என்ற இடத்தை 1788, ஜனவரி 26ல் அடைந்த்து. சிட்னி பிரபுவின் நினைவாக இவ்விடத்திற்கு அவர் சிட்னி எனப் பெயர் சூட்டினார். சிட்னி துறைமுகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஈயோரா (Eora) இனப் பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் பிலிப் உறுதியாக இருந்தார். பழங்குடிகளைக் கொல்லும் எவரையும் மரணதண்டனைக்கு உட்படுத்தினார். பிலிப், உடல் நிலை காரணமாக, 1792 ல் இங்கிலாந்து திரும்பினார். பென்னெலாங் என்ற பழங்குடிமகனுடன் நட்பு கொண்டிருந்த பிலிப், இங்கிலாந்து திரும்பும் போது அவரையும் அழைத்துச் சென்றார். வழியில் ஒரு கடற்கரையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்படவே, பென்னெலாங், பிலிப்பின் தோள்பட்டையில் வெட்டிவிட்டார். ஆனால் பதிலுக்கு அவரைத் தாக்க வேண்டாமென்று தனது ஆட்களிடம் கேட்டுக் கொண்டார் பிலிப். அவர் நியூ சவுத் வேல்சை விட்டுக் கிளம்பும் போது அங்கிருந்த மக்கள் தொகை 4,221 ஆகும். இவர்களில் 3,099 பேர் கைதிகள். ஆர்தர் பிலிப் 1814, ஆகஸ்ட் 31ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.