2011-08-29 15:25:25

வாரம் ஓர் அலசல் – வரலாறு சாதனைகளைப் பேசட்டும் - ஜன்லோக்பால்


ஆக.29,2011. இந்தியாவில், ஏன் பன்னாட்டு ஊடகங்களில், கடந்த பல நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த ஒரு விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அன்னா ஹசாரே என்ற 74 வயது சமூகநல ஆர்வலர் 288 மணி நேரம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் இஞ்ஞாயிறு காலை 10.30 மணியளவில் முடிவுற்றதையடுத்து “இது அகிம்சைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” போன்ற பாராட்டுக்களையும் பலர் இணையத்தில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் இப்போராட்டம் சரியா, தவறா என்ற விமர்சனக் கேள்விகளையும் பத்திரிகைகள் எழுப்பியுள்ளன. இவ்வேளையில் சமூக ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் பெர்னார்டு டி சாமி அவர்களை நாமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டோம். இவர் சென்னை இலொயோலா கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். RealAudioMP3
பேராசிரியர் பெர்னார்டு டி சாமி அவர்களின் கணிப்புப்படி, அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக இடம் பெற்ற நாடு தழுவிய போராட்டம், ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை, ஆனால் ஊழலால் பாதிக்கப்படுகிறவர்கள், ஊழலுக்குப் பலியாகுவோர் போன்றோருக்கு இதனால் பலன் இல்லை என்று தெரிகிறது. இவ்வேளையில் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விகளை எழுப்புகிறோம். ஹசாரேயின் நியாயமானப் போராட்டத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்த ஒரு நாட்டில் இன்னும் பல முக்கியமான போராட்டங்களுக்கு ஆதரவு காட்டப்படுவதில்லையே, அது ஏன்?
இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் தங்கள் உரிமைகளுக்காக அறுபது ஆண்டுகளாகப் போராடுகின்றனரே! நாட்டில் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெறக்கோரி 10 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருக்கிறார். ஷர்மிளாவோ, மணிப்பூர் பிரச்சனையோ ஏன் கவனம் பெறவில்லை?. வனங்களைக் காக்க பாஸ்கோ ஆலையை எதிர்த்து உயிரைக் கொடுத்துப் போராடும் பழங்குடிகளின் துயரம் யாருடைய கண்களிலும் படவில்லையே ஏன் ?. காஷ்மீரில் எத்தனை உயிர்கள் மாண்டாலும் அது யாரையும் பாதிப்பதாகத் தெரியவில்லையே!. கங்கையைப் பாதுகாக்க இரண்டு மாதங்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நிகமானந்தனின் மரணம் யாருக்கும் தெரியாமல் போனது ஏன்? இப்படி பதில் கிடைக்காத பல கேள்விகள் வருகின்றன.
இந்தியாவில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இலஞ்சம் பெறுகிறார்கள், ஊழல் புரிகிறார்கள் என்பது உண்மையானாலும், இலஞ்சத்தைக் கொடுப்பது யார்? ஊழலுக்குத் துணைபோவது யார்? இவற்றை வளர விட்டது யார்? இவற்றில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? மக்கள் பிரதிநிதிகள் அவை அன்னா ஹசாரேவின் மூன்று கோரிக்கைகளை ஏற்றுள்ள இந்நேரத்தில் இத்தகைய கேள்விகள் எழுகின்றன. திட்டம் போட்டு திருடுகின்ற கூட்டத்தை 1972ம் ஆண்டிலே சட்டம் போட்டுத் தடுக்கிற திட்டம் வந்தாலும் அது அன்றிலிருந்தே புறக்கணிக்கப்பட்டு வந்தது. சில அரசியல்வாதிகள் தங்களது திருட்டு ஊழலுக்காக அதனில் மாற்றம் கொண்டுவர முயற்சித்து வந்தனர். எனவே பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோரின் திருட்டைக் கண்டு கொள்ளாமல் அதற்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒத்துழைக்கும் நாம் அனைவரும் மாறும் போதுதான் ஊழலுக்கு எதிரானச் சட்டத்துக்கு உண்மையான வெற்றி கிடைக்கும்.
அண்மையில் ஊடகம் ஒன்றில் ஒரு புள்ளி விபரம் வெளியாகி இருந்தது. ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருக்கு, அதாவது மக்கள் அவை அங்கத்தினருக்கு ஓர் ஆண்டுக்கு ஆகும் செலவு 32,00,000ரூபாய். 534 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஆகும் செலவு சுமார் 855 கோடி ரூபாய். ஓர் உறுபப்பினருக்கு மாத ஊதியம் 12 ஆயிரம் ரூபாய். ஒரு மாதத்திற்கு அவரது தொகுதிச் செலவுக்கென ஒதுக்கப்படும் தொகை 10 ஆயிரம் ரூபாய். ஒரு மாதத்திற்கு அவரது அலுவலகச் செலவுக்கென 14 ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ மீட்டருக்கு 8 ரூபாய் வீதம் பயணக் கட்டணச் சலுகை 48 ஆயிரம், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சமயத்தில் ஒரு நாளைக்கு பஞ்சப்படி 500 ரூபாய், 40 விமானப் பயணங்களுக்குக் கட்டணம் இலவசம். இரயிலில் முதல் வகுப்புப் பயணமும் இலவசம். இப்படி இன்னும் பிற இலவசங்கள். மக்களின் பிரதிநிதிகளாகிய இவர்களுக்குச் செலவழிக்கப்படும் இப்பணம் யாருடையது என்று தெரியும்தானே. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பி ஓட்டளித்த பாமர மக்களை ஏமாற்றும் இந்த ஊழல்பேர்வழிகளைத் தண்டிப்பதற்கு அன்னா ஹசாரேக்களின் எழுச்சி தேவைதானே!
மெரினா கடற்கரையில் நடந்த ஹசாரே ஆதரவுப் போராட்டத்தில் முனுசாமி என்ற பெரியவர் ஒரு கையில் தேசியக் கொடியுடனும், மற்றொரு கையில் மெழுகுவர்த்தியுடனும் கலந்து கொண்டாராம். அவருக்கு அன்னா ஹசாரே பற்றியோ லோக்பால் மசோதா பற்றியோ எதுவுமே தெரியவில்லையாம். அவர் நிருபர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார் – “நாட்டைக் கொள்ளை அடிக்கிறவர்களை எதிர்த்து, ஊழலுக்கு எதிராக ஒரு 74 வயதுப் பெரியவர் அன்ன ஆகாரம் இன்றி போராடுகிறார், அதனால் நாம ஒண்ணும் செய்யலையேன்னு தோணுச்சு, அதனாலே இங்கே வந்தேன், ஆனா இங்கே வந்த பின் என்மேலே எனக்குக் கோபம் வந்தது. சவாரி வர்றவங்ககிட்ட நான் எவ்வளவோ நாள் காசு ஜாஸ்தி வாங்கி இருக்கேன், அதுவும் தப்பு தானே, இனி நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்” என்றாராம். அன்பர்களே இதுவல்லவா மாற்றம். அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மக்கள் பிரிதிநிதிகள் அவையை மசிய வைத்ததைவிட ஒரு சிறிய பாமர மனிதனில், படிப்பறிவில்லா ஓர் ஏழையின் சுயஉணர்வில் இவ்வளவு பெரிய மாற்றத்தை விதைத்துள்ளார். இப்படி ஒவ்வொரு முனுசாமியும் நினைத்து வாழ்க்கையை மாற்ற நினைத்தால் நாடே ஊழலின்றி இருக்கும். ஊழல் புரிவோருக்கு எவரும் துணை போகாமலும் இருப்பார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் இந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின உரையில் சொன்னார் – “ஊழல் புற்று நோயைப் போன்றது. அதை ஒழிக்க ஒரேயொரு மருந்தோ, தீர்வோ இருக்க முடியாது” என்று. ஆம். இக்காலத்தில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் ஊழல் என்பது சமூக வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நீங்கள் உங்கள் வாகனத்தில் வேகமாகச் செல்லும் போது காலாவதியான வாகன காப்பீட்டுச் சான்றிதழைப் பார்த்த காவலர் நீதிமன்றத்தில் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டச் சொல்கிறார். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? நூறு ரூபாயைக் காவலருக்கு இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகருவீர்களா? இல்லை, அபராதத் தொகையைக் கட்டுவீர்களா? நூறு ரூபாய் அபராதம் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தால் நீங்களும் ஊழலுக்கு உதவி செய்கின்றீர்கள் என்று சொல்லலாம்தானே. இவ்வாறு ஊழல் சிறுசிறு செயலிலும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இழையோடியிருக்கின்றது.
ஊழல் என்ற புற்று நோய்க்கு நாம் ஒவ்வொருவருமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பத்மபூஷன் ஹசாரே மக்கள் மனதில் விதைத்த தீரம் கூர் தீட்டப்படும். தென்றல் காற்று நம் வீட்டுச் ஜன்னலில் வீசும், வரலாறும் நம் சாதனைகளைப் பேசும்.








All the contents on this site are copyrighted ©.