2011-08-29 15:43:57

மத்தியப்பிரதேசக் கிறிஸ்தவர்கள் கடைபிடித்த இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாள்


ஆக.29,2011. இவ்வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில் மத்தியப்பிரதேசக் கிறிஸ்தவர்கள் இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாளைக் கடைபிடித்தனர்.
பல்வேறு செப வழிபாடுகள் மற்றும் இரத்ததான முகாம்கள் வழியாக இந்த நாள் கடைபிடிக்கப்பட்டதென்று மத்தியப் பிரதேசக் கத்தோலிக்கத் தலத்திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் 28 வரை நடைபெற்ற வன்முறைகளில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக சென்ற வாரம் வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த கந்தமால் பகுதி மக்கள் அச்சம் காரணமாக வழிபாடுகளை மேற்கொள்ளவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த வன்முறைகளால் 100 பேரளவில் கொல்லப்பட்டனர், மற்றும் 50000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாள் கடைபிடிக்கப்பட்டது என்று அருள்தந்தை முட்டுங்கல் கூறினார்.
மத்தியப்பிரதேச இசை மகாசங் என்ற அமைப்பு இந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.