2011-08-29 15:36:14

கடவுளைப் புறக்கணித்து வாழ்வோருக்குத் திருத்தந்தை எச்சரிக்கை


ஆக.29,2011. பணத்தையும் வெற்றியையும் தேடுவது உலகத்தின் போக்குப்படிச் சிந்திப்பதாகும், அதேநேரம் கடவுளை விலக்கி வைப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, உலகின் கண்களுக்குத் தோல்வியாகத் தெரிந்த சிலுவையை அன்புடன் ஏற்று கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஒருவரின் வாழ்வு, சமூகத்தில் அவரடையும் வெற்றி, உடல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றின் நிறைவில் மட்டும் கவனம் செலுத்தப்படும் போது கிறிஸ்து தமது சிலுவைப்பாடுகள் பற்றித் தெரிவித்த போது பேதுரு அதற்கு எதிர்ப்புக் கூறியது, இக்காலத்தில் மீண்டும் இடம்பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது என்று விளக்கினார் திருத்தந்தை.
ஆயினும் கிறிஸ்தவர்கள் தங்களது சிலுவைத் துன்பங்களைத் தனியாக அல்ல, மாறாக இயேசுவுடன் சேர்ந்து சுமக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இம்முவேளை செப உரையைக் கேட்கச் சென்றிருந்த இளம் குருத்துவ மாணவர்களிடம், கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கப் பயப்பட வேண்டாம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.