2011-08-27 16:10:24

ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது


ஆக.27,2011. ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், இந்நோயைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கின்றது என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் குறித்து கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அறிக்கை சமர்ப்பித்த UNAIDS என்ற ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆசிய-பசிபிக் பகுதியில் 2009ல் சுமார் 49 இலடசம் பேர் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறியது.
இவர்களில் பெரும்பாலானோர் கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா நியு கினி, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 11 நாடுகளில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறியது.
2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் இந்நோயால் புதிதாகத் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்துள்ளது, இதற்கு 2006ல் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையே காரணம் என்றும் அவ்வறிக்கை கூறியது.
2009ல் ஆசிய-பசிபிக் பகுதியில் 30 நாடுகளில் எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுக்கு 110 கோடி டாலர் செலவழிக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவித்தது.







All the contents on this site are copyrighted ©.