2011-08-26 14:40:29

பாதுகாப்பான குடிநீர் வழங்குவதால் ஒவ்வொரு நாடும் உறுதியான பொருளாதாரத்தைப் பெற முடியும் - ஐ.நா. உயர் அதிகாரி


ஆக.26,2011. உலகின் ஒவ்வொரு நாடும் உருவாக்கும் பொருட்களின் மொத்த மதிப்பு, அதாவது, GDPயில் மிகக் குறைந்த அளவான 0.16 விழுக்காடு அளவு தண்ணீர் தொடர்பான முயற்சிகளுக்கு செலவிடப்பட்டால், உலகில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று ஐ.நா. இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.
2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகளில் ஒன்றாக விளங்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், கழிப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாடும் உறுதியான பொருளாதாரத்தைப் பெற முடியும் என்று ஐ.நா. உயர் அதிகாரி Achim Steiner கூறினார்.
ஒவ்வொரு நாடும் தொழில் துறையில் பெருமளவு முன்னேறி வருவதால், மிக அதிக அளவு தண்ணீர் இத்துறையால் பயன்படுத்தப்படுவதோடு, தொழில்துறையின் கழிவுகள் தண்ணீரை அதிகம் மாசுபடுத்தும் ஆபத்தும் பெருகி வருகிறதென Steiner சுட்டிக் காட்டினார்.
உலகில் கிடைக்கும் உப்பற்ற நல்ல நீர் மிகக் குறைந்த அளவே உள்ளதால், நல்ல நீரைத் தகுந்த வழியில் பயன்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா.விடுத்துள்ள இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.