2011-08-26 14:50:20

ஆகஸ்ட் 27. வாழ்ந்தவர் வழியில் .... W.E.B. தூப்வா


W.E.B. தூப்வா என்பவர் ஒரு சமூக ஆர்வலராக, வரலாற்று ஆசிரியராக, மனித உரிமை நடவடிக்கையாளராக, எழுத்தாளராக, பத்திரிகை ஆசிரியராக அறியப்படுகின்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அடிமைகளாகக் கொணரப்பட்ட கறுப்பின மக்களின் பரம்பரையில் 1868ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி பிறந்த இவர், கறுப்பின மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் சம உரிமைகள் பெறவேண்டும் என்ற பொதுநோக்குடன் உழைத்தவர். புகழ்பெற்ற Harvard பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.
தன் இரண்டாம் வயதிலேயே தந்தையும் தாயும் பிரிந்ததால் தாயுடனேயே வளர்ந்த காலத்தில், பள்ளிக்குச் சென்று வந்த மீதி நேரங்களில் சிறு சிறு வேலைக்குச் சென்று தன் தாய்க்கு உதவினார். கல்வி ஒன்றே தன் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த இவர், பல்வேறு கல்வி உதவித் தொகைகளைப் பெற்று படிப்பில் முன்னேறினார். பெர்லினுக்குச் சென்று கல்வியைத் தொடரும் உதவித்தொகை கிட்டியபோது, ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா வாழ் ஆப்ரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என அதிக ஆர்வம் கொண்டு உழைத்தார். கல்வி மூலம் அவர்கள் முன்னேற முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 1909ம் ஆண்டு, 'நிறப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கான தேசிய அவை' என்ற அமைப்பை, தன்னோடு ஒத்தக்கருத்துடையவர்களுடன் இணைந்துத் துவக்கினார். அணு ஆயுதப் பயன்பாட்டை வன்மையாக எதிர்த்தார். 1950ம் ஆண்டில், தன் 82ம் வயதில் நியூயார்க்கிலிருந்து செனட்டர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி கண்டாலும், அவரின் சமூக உரிமைகளுக்கானப் பணி தொடர்ந்தது. 1959ல் லெனின் அமைதி விருதைப் பெற்ற இவர், 1961ல் கானா அரசுத்தலைவரின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்குச் சென்று 'ஆப்ரிக்க கலைக்களஞ்சியம்' எழுதப்பட வழிகாட்டுதலாகச் செயல்பட்டார். W.E.B. தூப்வாவுக்கு கானா நாட்டுக் குடியுரிமையும் வழங்கப்பட்டது. 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி, கானாவில் காலமானார் தூப்வா. இவர் ஐந்து நாவல்கள் உட்பட 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். தன் 95 வருட வாழ்வில் 4000க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.