2011-08-25 14:54:22

ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாவதற்கு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவத் தலைவர்கள் எதிர்ப்பு


ஆக.25,2011. ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்குவது குறித்து தங்கள் எதிர்ப்பையும், விண்ணப்பங்களையும் அந்நாட்டின் 226 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவத் தலைவர்கள் அனுப்பியுள்ளனர்.
சிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் George Pell, ஆங்க்லிகன் பேராயர் Peter Jensen, லுத்தரன் சபையின் தலைவர் Mike Semmler உட்பட 50 தலைவர்களுக்கும் அதிகமானோர் இப்புதன் முதல் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்முயற்சியைத் தடுக்கும் நோக்கத்தில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
குழந்தைகள் பிறப்பதற்கும், நல்லதொருச் சூழலில் வளர்வதற்கும் தாய், தந்தை என்ற இருபால் உறவு, திருமணம், குடும்பம் ஆகிய அடிப்படை சமுதாயக் கட்டுமானங்கள் தேவை என்று இத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபட்ட இளையோர் பிளவுபட்ட, தந்தையற்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய இத்தலைவர்கள், சமுதாயம் உறுதியான நிலையில் இருக்க ஆண், பெண் ஆகியோர் உருவாக்கும் குடும்பங்கள் மிகவும் தேவை என்று கூறினர்.
தற்போது ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பணியாற்றிவரும் Julia Gillard பாரம்பரிய வழியில் நடைபெறும் திருமணத்தையே ஆதரிப்பவர் என்பதால், அவரை பிரச்சனையில் சிக்கவைப்பதற்கு எதிர் கட்சிகள் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியே திருமணம் குறித்த இந்த சட்ட மாற்றத்தைக் கோரும் விவாதங்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.