2011-08-24 15:14:39

புரட்சியாளர்களுக்கும் Gaddafiக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதே அந்நாட்டிற்கு பயனுள்ள ஒரு தீர்வாகும் - ஆயர் மார்திநெல்லி


ஆக.24,2011. லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதே அந்நாட்டிற்கு பயனுள்ள ஒரு தீர்வாகுமேயொழிய, படைபலம் கொண்டு NATO நாடுகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் பயனற்றவை என்று Tripoli ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மார்திநெல்லி கூறினார்.
புரட்சியாளர்கள் Tripoliயைக் கைப்பற்றியதாகக் கூறும் அறிக்கைகள் சரியானவை அல்ல என்றும், தலைநகரைப் புரட்சியாளர்கள் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறிய ஆயர் மார்திநெல்லி, இதுபோன்ற அறிக்கைகளால் மக்கள் பெரிதும் குழப்பத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
லிபியாவில் புரட்சிகள் ஆரம்பமானதிலிருந்து, கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர், தான் கூறுவது அறிவுக்குப் புறம்பான ஒரு கூற்றாகத் தெரிந்தாலும், Gaddafiயும் புரட்சியாளர்களும் சமரச முயற்சிகளில் ஈடுபடுவது ஒன்றே நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஆறு மாதங்களாய் அந்நாட்டில் நிலவி வரும் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு லிபியாவில் பணி புரியும் கத்தோலிக்கக் குருக்களும், துறவியரும் இடைவிடாமல் உதவிகள் செய்து வருகின்றனர் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகும் FIDES செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
NATO உதவியுடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள புரட்சியாளர்களுக்கும், Gaddafi படையினருக்கும் இடையே ஆகஸ்ட் 19 முதல் ஆரம்பமான தாக்குதல்கள் இன்னும் தீராததால், பொதுமக்கள், முக்கியமாக, கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.









All the contents on this site are copyrighted ©.