2011-08-24 15:14:17

கட்டக்-புபனேஷ்வர் பேராயர் : ஒரிசாவில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட அழைப்பு


ஆக.24,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் கட்டக்-புபனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா.
ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான கடும் வன்முறை ஆரம்பித்த மூன்றாமாண்டு நினைவையொட்டி இவ்வாறு அழைப்பு விடுத்த பேராயர் பார்வா, 2008ம் ஆண்டின் கடும் துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவர்களாகிய தாங்கள் எமது மண்ணில் அமைதியாக வாழ விரும்புகிறோம் என்றார்.
கிறிஸ்தவர்களாகிய தாங்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருந்தாலும், காழ்ப்புணர்வையோ பழிவாங்குதலையோ மனத்தில் இருத்த விரும்பவில்லை என்றுரைத்த அவர், கடந்த காலத்தில் வன்முறையில் இறந்தவர்களை நினைக்கின்றோம், ஒரிசாவின் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கின்றோம் என்று கூறினார்.
இதற்கிடையே, “பயப்படாதீர்கள்”, “உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் இரு அருள்மொழிகளை பேராயர் பார்வா விசுவாசிகளுக்குக் கூறி வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான கடும் வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரைப் புலம் பெயர்ந்தனர். 170க்கும் அதிகமான ஆலயங்களும் சிற்றாலயங்களும் தாக்கப்பட்டன.
எனினும் புலம் பெயர்ந்த மக்களில் பலர் சொந்த இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் நான்காயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.