2011-08-24 16:19:09

ஆகஸ்ட் 25, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, கிருபானந்த வாரியார்


திருமுருக கிருபானந்த வாரியார் 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தார்.
தினமும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட இவர், எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12ம் வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். தமது 15ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமி அம்மையாரை தனது 19ம் வயதில் திருமணம் புரிந்தார்.ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சியும் பெற்றுள்ளார்.
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.
"திருப்புகழ் அமிர்தம்" என்றப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500க்கும் மேற்பட்ட ஆன்மீக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதியுள்ளார்.
1993 அக்டோபர் 19ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மீகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.








All the contents on this site are copyrighted ©.