2011-08-23 15:07:48

கர்நாடகாவில் தொடர்ந்து இரு ஞாயிற்றுக் கிழமைகளில் திருவழிபாடுகள் நேரத்தில் வன்முறை கும்பலால் இடையூறு


ஆக.23,2011. கர்நாடகாவில் கடந்த இரு ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்தவ சபையொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஞாயிறு வழிபாடுகளை இந்து தீவிரவாத அமைப்பினர் இடைமறித்து, கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவின் Mudhol எனும் இடத்தில் தொடர்ந்து இரு ஞாயிற்றுக் கிழமைகளில் திருவழிபாடுகள் நேரத்தில் வன்முறை கும்பல் ஒன்று வழிபாடுகளை நிறுத்தி, வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட அப்பம், இரசம் ஆகியவற்றை அவமரியாதைக்குரிய வகையில் கையாண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த ஞாயிறு வழிபாட்டை தலைமையேற்று நிகழ்த்திய Sangappa Hosamani Shadrak என்ற போதகரையும் இவ்வன்முறை கும்பல் அடித்துத் துன்புறுத்தினர். வன்முறை கும்பல், போதகர் மீது அளித்த புகாரை அடுத்து, காவல் துறையினர் போதகரையும் அவருடன் இருந்த கிறிஸ்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.

கர்நாடகா, ஒரிஸ்ஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் காணும் போதும், இவ்வன்முறைகளுக்கு அரசே துணைபோவதைக் காணும் போதும், சுதந்திர, மத சார்பற்ற இந்தியாவில் வாழ்கிறோமா என்ற அச்சத்தை உருவாக்குகிறது என்று இந்தியக் கிறிஸ்தவ அகில உலக அவையின் தலைவர் Sajan George கூறினார்.








All the contents on this site are copyrighted ©.