2011-08-23 14:31:46

ஆகஸ்ட் 24 வாழ்ந்தவர் வழியில்.... நாமக்கல் கவிஞர்


“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற சக்திமிக்க தேசபக்திப் பாடலை உருவாக்கிய நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சேலம் மாவட்டம், மோகனூரில் பிறந்தார். தமிழறிஞரும், கவிஞரும் ஆன இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை நாட்டுப்பணிக்கென ஈர்த்தார். ஆங்கிலேய அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
‘கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.
தமிழக அரசு இவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதளித்து போற்றியது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை ஆகஸ்ட் 24, 1972 காலமானார்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக, அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.