2011-08-22 15:25:01

தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு இலங்கை, நியுசிலாந்து ஊடகம்


ஆக.22,2011. தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப்படைகள் வணிக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
நியுசிலன்ட் ஹெரால்ட்‘என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டாலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, குடியியல் அதிகாரத்தை மறைப்பதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையைக் குறிப்பிட்டுள்ள ‘நியுசிலன்ட் ஹெரால்ட், அங்கு ஒவ்வொரு 10 இலட்சம் மக்களுக்கும் 8000த்திற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப்படையினரைக் கொண்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபக்ச நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் ‘நியுசிலன்ட் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.