2011-08-22 15:22:27

இதயம்கனிந்த நன்றி நிறைந்த வார்த்தைகளுடன் உலக இளையோர் தினத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை


ஆக.22,2011. இஸ்பானிய மக்கள், உலக இளையோர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள், தன்னோடு செபித்த இலட்சக்கணக்கான திருப்பயணிகள் என எல்லாருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மத்ரித் நகரை விட்டுப் புறப்படுகிறேன் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மத்ரித்தில் நடைபெற்ற 26வது உலக இளையோர் தின நிகழ்வுகளை இஞ்ஞாயிறன்று நிறைவு செய்து உரோமைக்குப் புறப்படுவதற்கு முன்னர் மத்ரித் பரஹாஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
தன்னை வழியனுப்ப வந்திருந்த இஸ்பெயின் அரசர் ஹூவான் கார்லோஸ் மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் உரையாற்றிய திருத்தந்தை, மாபெரும் இஸ்பெயின் நாடு, தனது ஆழமான சமய மற்றும் கத்தோலிக்க உணர்வைக் கைவிட்டு விடாமல், தனது மதிப்புமிக்க, பன்னமைத்தன்மை கலந்த மற்றும் திறந்த மனம் கொண்ட பண்புகளில் முன்னோக்கிச் செல்லும் திறமையைக் கொண்டிருக்கிறது என்றார்.
திருமுழுக்குப் பெற்ற பெரும்பாலான குடிமக்களைக் கொண்டுள்ள இஸ்பெயின் நாட்டின் பொதுவான கொள்கைகளில் கத்தோலிக்க விசுவாசம் குறைந்த அளவே எதிரொலிக்கின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இஸ்பானிய சமுதாயம், உலக இளையோர் தினத்தை நடத்தியதைப் பார்க்கும் பொழுது, இளையோர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் இன்னும் ஆழமாக வேரூன்ற அது உதவ முடியும் என்பதை எடுத்துக் காட்டியது என்ற திருத்தந்தை, மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாக, இந்த நாட்களை இத்தனை ஆர்வத்துடனும் அருளுடனும் கொண்டாட எனக்கு உதவிய நம் ஆண்டவருக்கும் நன்றி சொல்லும் இதயத்தோடும் இஸ்பெயினிலிருந்து புறப்படுகின்றேன் என்றார்.
திருத்தந்தை விமானநிலையத்திற்குப் புறப்படு முன்னர், இந்த 26வது உலக இளையோர் தினத்தில் தன்னார்வப் பணி செய்த பல நாடுகளின் 12 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
மத்ரித் பரஹாஸ் சர்வதேச விமானநிலையத்திற்கும் பல இளையோர் இஸ்பானியக் கொடிகளுடன் வந்து திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.
அடுத்த உலக இளையோர் தினம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.