2011-08-21 13:28:26

26வது உலக இளையோர் தின நிறைவு


ஆக.21,2011. “கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் உறுதியாக இருங்கள்”. இந்த வார்த்தைகள்தான் இஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தை கடந்த ஆறு நாட்களாக நிறைத்திருக்கும் 190க்கும் மேற்பட்ட நாடுகளின் இலட்சக்கணக்கான உலக இளையோர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஐந்து சொற்கள், கனமழையிலும் கடும் வெயிலிலும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தியவை. 26வது உலக இளையோர் தினப் பெருவிழாவுக்காக மத்ரித் நகருக்கு நான்கு நாட்கள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, இப்பயணத்தின் மூன்றாவது நாளான இச்சனிக்கிழமை இரவு ஏழு மணி நாற்பது நிமிடத்துக்கு மத்ரித் சான் ஹோசே அதாவது தூய வளன் நிறுவனத்திற்குச் சென்றார். புனித இறை யோவான் மருத்துவ சபையினரால் 1899ம் ஆண்டு கட்டப்பட்ட இந்நிறுவனம், உடல், மன மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக வலிப்பு நோயாளிகள் என சுமார் 400 பேரைப் பராமரித்து வருகின்றது. இந்நோயாளிகளையும் இவர்களுக்குச் சேவை செய்யும் சுமார் 300 பணியாளரையும் காணச் சென்றார் திருத்தந்தை.

இந்த ஹோசே நிறுவனத்திற்குச் செல்லுமுன்னர், கார்மேல் சபை அடைபட்டதுறவு இல்ல 103 வயது அருட்சகோதரி தெரசிட்டாவைச் சந்தித்தார். இச்சகோதரி 19 வயதில் அடைப்பட்ட துறவு வாழ்வில் சேர்ந்தவர். இச்சகோதரியுடன் மற்றுமொரு 80 வயது அருட்சகோதரியையும் சந்தித்தார் திருத்தந்தை. இச்சகோதரி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கர்தினால் ராட்சிங்கராகப் பணி செய்த விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தில் பணி செய்தவர். இந்த ஹோசே நிறுவனத்தில் சுமார் 200 மாற்றுத்திறனாளிச் சிறார் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 20 வயது உடல், உள்ள மாற்றுத்திறனாளியான அந்தோணியோ, திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய போது, தனது இந்நிலையை ஏற்றுக் கொள்வதற்குப் பெற்றோரின் அன்பு எவ்வாறு உதவியது என்பதை எடுத்துரைத்தார். பின்னர் திருத்தந்தை அந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளிடம், அன்பு நண்பர்களே, மனித வாழ்க்கையின் விலையில்லா மதிப்பு பற்றிக் கேள்வி எழுப்பும் நமது சமுதாயத்திற்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் என்றார்.

அன்புக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள். இந்த நவீன உலகம் துன்பங்களை எதிர்நோக்கப் போராடுகின்றது. அதுவும் வாழ்வின் இளம் வயதில் துன்பம் வந்துவிட்டால் நாம் அசைக்கப்படுகின்றோம். வாழ்க்கை இன்னும் மேலானதாக இருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறோம். தனது சமூகத்தின் உறுப்பினர்களின் துன்பங்களை ஏற்க முடியாத, கருணை என்ற பண்பு மூலம் துன்புறுவோரின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன்வராத சமுதாயம் குரூரமான மற்றும் மனிதாபிமானமற்ற ஒரு சமூகம்

என்றார். பின்னர் பத்து மாற்றுத்திறனாளிச் சிறாரைத் தனித்தனியாக ஆசீர்வதித்தார். பின்னர் அங்கிருந்து Cuatro Vientos விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. 1911ம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்விமான நிலையத்தில் ஏறக்குறைய பத்து இலட்சம் இளையோர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது செபச்சூழலில் அமர்ந்திருந்தனர். பலர் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே அவ்விடத்திற்கு வந்து விட்டனர். சனிக்கிழமை மாலை நான்கு மணியிலிருந்தே இங்கு திருவிழிப்புச் செபங்கள் தொடங்கிவிட்டன. உலக இளையோர் தின நிகழ்வுகளில் இதுவும் முக்கியமான நிகழ்வாகும். இரவு 8.30 மணியளவில், இந்திய நேரம் நள்ளிரவில் திருத்தந்தையின் திறந்த கார் அவ்விடத்தை வலம் வந்து அவர் வழிபாட்டு மேடையைச் சென்றடைந்ததும் இளையோர் குழு, இவ்வுலக தின பெரிய மரச்சிலுவையை அம்மேடைக்குத் தூக்கிச் சென்றது. பின்னர் பிரிட்டன், கென்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஐந்து இளையோர் திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்டனர். தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர், திருத்தந்தை தனது மறையுரையைத் தொடங்கியவுடன், பலத்த காற்று வீசத் தொடங்கியது. திருத்தந்தையால் உரையைத் தொடர இயலவில்லை. வானம் திறந்து, மழையும் கொட்ட ஆரம்பித்தது. உடனடியாகப் பெரிய வெள்ளைக் குடையை அவருக்கு மேல் உயர்த்திப் பிடித்தனர். இருந்தாலும், அப்போது அடித்த காற்று மற்றும் கனமழையினால் சிறிது நேரம் எதுவுமே செய்ய முடியவில்லை. திருத்தந்தையின் மறையுரைத் தாள்கள் முழுவதும் மழையில் நனைந்து விட்டன. திருத்தந்தையும் இருக்கையைவிட்டு அசையாமல், புன்முறுவல் பூத்துக்கொண்டே இருந்தார். இளையோரும் அசையாமல் நின்றபடியே, “நாங்கள் திருத்தந்தையின் இளையோர்” என்று பாடிக் கொண்டிருக்க, “இளையோரே, உங்களது மகிழ்ச்சிக்கு நன்றி” என்று திருத்தந்தை சொல்ல, இளையோர் மேலும் ஆர்ப்பரித்தனர்.

பின்னர் மழை நின்றதும், திருத்தந்தை இளையோரிடம், “உங்களது விடாஉறுதிக்கு நன்றி. உங்களது பலம், மழையைவிட பெரியது. நம் ஆண்டவர் மழையோடு நமக்குப் பல ஆசீர்வாதங்களை அனுப்புகிறார். இதில் நீங்கள் ஓர் எடுத்துக்காட்டு. இது உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இன்றிரவு கடவுள் உங்கள் இதயங்களில் ஏற்றிய சுடரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதை அணைய விடாமல் தினமும் புதுப்பித்து, இருளில் வாழ்கின்ற மற்றும் ஒளியைத் தேடுகின்ற உங்களையொத்த வயதுடையோருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.” என்று கூறி, திருவழிபாட்டைத் தொடர்ந்தார்.

இறுதியில் “அன்பு இளையோரே, மழையை எதிர்த்து நின்றது போல் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் உறுதியாக இருங்கள். நீங்கள் செய்த தியாகத்திற்கு நன்றி. நன்றாகத் தூங்குங்கள். கடவுளுக்கு விருப்பமானால் நாளை சந்திப்போம். உங்களுக்காகக் காத்திருப்பேன். இன்றைய இரவு போல வாழ்க்கையின் சோதனை வேளைகளில் கிறிஸ்துவோடு இருங்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி”என்று சொல்லி திருத்தந்தை அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

இஞ்ஞாயிறு 26வது உலக இளையோர் தினத்தின் நிறைவு நாள். முந்திய நாள் இரவு கனமழையைக் கொட்டிய வானம், இஞ்ஞாயிறு காலை பளிச்சென்று திறந்தது. உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு Cuatro Vientos விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆயர்கள், குருக்கள் ஆகியோருடன் விழாத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். முந்திய நாள் மழையின் பாதிப்பின் அறிகுறியே இல்லாமல் இந்நாளில் எல்லாரும் வெயிலுக்குத் தொப்பி அணிந்து கொண்டு சுமார் இருபது இலட்சம் பேர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

பொன்னிறத்தில் திருப்பலி பாத்திரம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்த திருப்பலி மேடையிலிருந்து திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்குச் செவிமடுப்போம். (மறையுரை)

திருத்தந்தை தனது மூவேளை செப உரையில் பல மொழிகளில் வாழ்த்தினார். அத்துடன் 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த உலக இளையோர் நாள் நடைபெறும் என்று திருத்தந்தை அறிவித்தவுடன், பிரேசில் நாட்டு இளையோர் கொடிகளை ஆட்டிக் கொண்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இத்திருப்பலி மற்றும் மூவேளை செப உரையின் இறுதியில் இதில் பங்கெடுத்த இஸ்பெயின் அரசர் ஹூவான் கார்லோஸ் மற்றும் அரசி சோஃபியாவை கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை. இளையோரும் ஒருவர் ஒருவரை வாழ்த்தி, Cuatro Vientos விமான நிலையத்திலிருந்து கூட்டம் கூட்டமாகத் தங்கள் தங்கள் நாடுகளின் கொடிகளுடன் நகர்ந்தனர்.
“கிறிஸ்துவில் வேரூன்றி அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாக இருங்கள். விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”(கொலோ.2,7) என்ற விருதுவாக்குடன் நடைபெற்ற 26வது உலக இளையோர் தினம் இத்துடன் நிறைவுக்கு வந்தது. திருத்தந்தை இறுதியில் உரைத்தது போல, இளையோர் புதிய நற்செய்திப்பணியின் திருத்தூதர்களாகச் செயல்பட வாழ்த்துவோம். இவ்வுலகுக்குத் தேவைப்படும் இவர்களது விசுவாசச் சான்று வாழ்வும் கடவுள் பற்றிய உணர்வும் இவர்களிள் வளரவும் வாழ்த்துவோம்.







All the contents on this site are copyrighted ©.