2011-08-18 16:03:23

மதமாற்றத் தடை சட்டமாவதைத் தடுக்க நேபாள கிறிஸ்தவர்கள் முயற்சி


ஆக.18,2011. மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.
ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளு மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர்.
இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.
இந்த மசொதாவுக்குப் பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.