2011-08-18 16:04:12

ஜப்பானிய மக்களிடம் காணப்படும் நேர்மைக்கு மற்றுமொரு சான்று


ஆக.18,2011. மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றைத் தொடர்ந்து அப்பகுதியில் உண்டான சேதங்கள் மத்தியில் கண்டெடுக்கப்பட்ட 5 கோடி பவுண்ட், அதாவது, 375 கோடி ரூபாய் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்டப் பகுதியில் இருந்த வங்கிகளில் 5700 காப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தை, அப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வப் பணியாளர்கள் அப்படியே காவல் துறையிடம் ஒப்படைத்தனர் என்றும், இவ்விதம் கொடுக்கப்பட்ட பணம் அதன் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வங்கிக் காப்பறைகள் சில ஒரு வேளை சூறையாடப்பட்டிருக்கலாம். ஆனால், அப்பகுதியின் அழிவுகளிலிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை அவற்றை இழந்த உரிமையாளர்களைச் சென்று அடைந்து வருவது ஜப்பானிய மக்களிடம் இன்றும் காணப்படும் நேர்மையைப் பறைசாற்றுகிறதென்று Yokohama பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் Ryuji Ito கூறினார்.








All the contents on this site are copyrighted ©.