2011-08-18 16:02:55

கடவுளை இழந்துள்ளதே கலவரங்களுக்குக் காரணம் - இங்கிலாந்து ஆயர்


ஆக.18,2011. கடவுளையும், கிறிஸ்துவத்தையும் இங்கிலாந்து இழந்துள்ளதால், நன்னெறி மதிப்பீடுகளையும் இழந்து நிற்கிறது என்று இங்கிலாந்தின் லீட்ஸ் மறைமாவட்ட ஆயர் Arthur Roche கூறினார்.
மத்ரிதில் நடைபெறும் உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்றிருக்கும் ஆயர் Roche, வத்திக்கான் வானொலிக்கு இப்புதனன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மைய இங்கிலாந்து கலவரங்கள் பற்றி ஆயர் அவர்களிடம் கேட்டபோது, இங்கிலாந்தில் உள்ள இளையோர், கடவுள் மதம் ஆகியவற்றை இழந்து வாழ்வதால் அவர்களிடம் வளர்ந்து வரும் ஏமாற்றம், விரக்தி ஆகியவைகளே இக்கலவரங்களில் அவர்களை ஈடுபடுத்தியது என்று ஆயர் Roche தெளிவுபடுத்தினார்.
இளையோர் மாநாட்டைப் பற்றி அவர் கூறுகையில், மத்ரிதில் தற்போது நிகழ்வன இளையோர் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் என்றும், இந்தக் காட்சிகளை உலகிற்கு விளம்பரப்படுத்த உலகின் முக்கியமான தொடர்புசாதன நிறுவனங்கள் அங்கு இல்லாதது பெரும் குறையே என்றும் லீட்ஸ் ஆயர் Arthur Roche மேலும் கூறினார்.
இதற்கிடையே, இங்கிலாந்து கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கென முதல்தர கிறிஸ்தவ வானொலி (Premier Christian Radio) என்ற நிறுவனம் Westminsterல் இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த திருவிழிப்புச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளும் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழிப்பு, சமுதாயத்தில் நம்பிக்கையை வளர்க்க நாம் எடுத்துள்ள முதல் முயற்சியே என்று இக்கூட்டத்தில் பேசிய Southwark ஆயர் Christopher Chessun கூறினார்.








All the contents on this site are copyrighted ©.