2011-08-17 15:19:28

மத்ரிதில் ஆரம்பமான உலக இளையோர் மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் கர்தினால் Stanislaw Rylko


ஆக.17,2011. திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கும் நம் மத்தியில் மற்றொரு மிக முக்கிய விருந்தினராக அருளாளர் இரண்டாம் ஜான் பால் நம்முடன் இருக்கிறார் என்று கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
இச்செவ்வாயன்று மத்ரிதில் ஆரம்பமான உலக இளையோர் மாநாட்டின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்திய பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Rylko, அங்கு கூடியிருந்த 500000க்கும் மேற்பட்ட இளையோரை வரவேற்று, மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவில் வேரூன்றிய விசுவாசம் நம் ஒவ்வொருவரது வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், இன்றைய உலகில் விசுவாச வாழ்வு வாழ்வது சவால்கள் நிறைந்த ஒன்று என்றும் கர்தினால் இளையோரிடம் கூறினார்.
இளையோர் மீது பரிவு கொண்டிருந்த அருளாளர் இரண்டாம் ஜான்பால் இம்மாநாட்டின் பாதுகாவலராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Rylko, அவர் இளையோரிடம் அடிக்கடி கூறி வந்த வார்த்தைகளான, 'கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் தேர்ந்தெடுக்க அஞ்சாதீர்கள்!' என்பதையும் நினைவுறுத்தினார்.
கடவுளை மறந்து, அல்லது மறுத்து வாழும் இவ்வுலகிற்கு, முக்கியமாக, இளையோர் மத்தியில் கடவுள் நம்பிக்கை குறைந்து வரும் இக்காலத்திற்கு மத்ரிதில் கூடியிருக்கும் இளையோர் ஒரு மாறுபட்ட சாட்சியாக திகழ்கிறார்கள் என்று கர்தினால் Stanislaw Rylko சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.