2011-08-17 15:19:42

உலக இளையோர் மாநாட்டின்போது திருத்தந்தையைச் சந்திக்க விழையும் கந்தமால் பகுதி இளம் ஆசிரியை


ஆக.17,2011. உலக இளையோர் மாநாட்டின்போது திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதி மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அவர்கள் வாழ்ந்து வரும் விசுவாச வாழ்வையும் குறித்து திருத்தந்தையிடம் சொல்வேன் என்று ஓர் இளம் ஆசிரியை கூறினார்.
2007, மற்றும் 2008ம் ஆண்டுகளில் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஆளான Mousomi Kumar என்ற இளம் வயது ஆசிரியை ஒரிஸ்ஸா தலத்திருச்சபையும் அவரது குடும்பத்தினரும் செய்த உதவிகளைக் கொண்டு மத்ரிதில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் திருத்தந்தையைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், தானும், இன்னும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களும் அனுபவித்தத் துயரங்களைத் திருத்தந்தையிடம் கூறி, அவரது செபங்களையும் ஆசீரையும் வேண்டவிருப்பதாகக் கூறினார்.
கட்டக் புபனேஸ்வர் மறைமாவட்டத்தில் இளையோர் பணியில் ஈடுபட்டிருக்கும் அருள்தந்தை Rabindra Ranasingh இம்மாநாட்டில் தான் கலந்து கொள்வது, இளையோருக்கான தன் பணியை இன்னும் தீவிரமாக்கும் ஒரு உந்து சக்தியென்று கூறினார்.
இதற்கிடையே, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நினைவு 'இந்துமத விசுவாசத்தைக் காக்கும் நாளாக' கடைபிடிக்கப்படும் என்று சங் பரிவார் குழுவினர் அறிவித்திருப்பதையடுத்து, ஒரிஸ்ஸாவில் மீண்டும் பதட்ட நிலை உருவாகும் என்று அங்குள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் கவலையை வெளியிட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.